மாநகராட்சி தேர்தல் !

மும்பை பெருநகர நகராட்சி கழகத்தின் (Brihanmumbai Municipal Corporation - BMC) தேர்தல் நாளை (பிப். 1) நடைபெறவுள்ளது. கடந்த நாற்பது நாட்களாக நடந்துவந்த தேர்தல் முழக்கங்களிலிருந்து இன்று சற்று அமைதி கிடைத்துள்ளது.சிவசேனா-பிஜேபி யிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தேசிய காங்கிரஸ் கட்சியும் (Nationalist Congress Party of Sharad Powar) கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. மும்பை தவிர தானே, உல்லாஸ்நகர், புனெ, நாக்பூர், பிம்ப்ரி, சின்ச்வாட், நாசிக், சோலாப்பூர், அகோலா மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

சிவசேனா-பிஜேபி கூட்டணி வலுவாக தோற்றமளித்தாலும் தாக்கரே குடும்பப்பகையினால் பிளவுபட்டுள்ள சேனாவின் பலம் ஐயத்திற்குறியதே. வெளிவந்து மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற கட்சியை ஆரம்பித்துள்ள ராஜ் தாக்கரே இளம் வேட்பாளர்களை நிறுத்தி களம் காணவிருக்கிறார். சிவசேனையிலிருந்து வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கும் ரானேயின் தாக்கம் மும்பையில் எவ்வளவு என்பதும் புரியாத புதிர்.

BMC நடப்பு ஆட்சியின்பால் உள்ள வெறுப்பை பயன்படுத்திக் கொண்டு எளிதாக வெல்லக்கூடிய நிலையை தங்கள் விட்டுக் கொடுக்காத அரசியலால் மாநில ஆளும் கூட்டணி பிரிந்து காங்கிரஸும் என்சிபியும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் 227 தொகுதிகளில் ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 'தூக்கு' நகராட்சியவை அமையும் வாய்ப்புள்ளது. தென்னகத்திலிருந்து அ.இ.அ.தி.மு.க மூன்று இடங்களில் (திருமதிகள் சுமதி, நாஃபிசா சாயித் மற்றும் மகாலட்சுமி நாய்டு ) போட்டியிடுகின்றது.

நகராட்சி குறைகளைத் தவிர இட ஒதுக்கீடு, கைலாஞ்சி சம்பவங்கள், மண்ணின் மைந்தர்/ வெளிமாநிலத்தவர், வெளிநாட்டு சட்ட அனுமதியில்லாத அகதிகள் (பங்களாதேசிகள்) எனப் பல பிரச்சினைகள் கவனம் பெற்றன.

தில்லி சாலைகளை கண்டு ஞானோதயம் பெற்றதுபோல நடிகை ப்ரீடீ ஜிந்தா மும்பை சாலையின் குண்டும் குழியும் மாற அனைவரும் வாக்களிக்க வேண்டியிருக்கிறார். ஹேமமாலினி "மும்பையின் வாழ்வியல் பிடிக்கவில்லையென்றால் உங்கள் மாநிலங்களுக்கே செல்லுங்கள்" என்று வட இந்தியருக்கு 'அறிவுரை' கூறி பலத்த பிரச்சினையை எழுப்பி பின் பின்வாங்கினார்். பால்தாக்கரே முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்துகணிப்பை ஆதாரமாகக் கொண்டு இல்லாத ஒரு பிரச்சினையான மும்பையை மகாராஷ்ட்ரத்திலிருந்து பிரிக்கக் கூடாது என்று முழங்கியவர், தனது இந்துத்வா பாணி பிரசாரத்தில் முகமது அஃப்சலின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் நாளெடுத்துக் கொள்வதை குறிப்பிட்டு, அவரது நீள்முடி கண்ணை மறைப்பதாக திங்களன்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு கண்ணியமான தலைவரை் தங்கள் அழுக்கு அரசியலில் இழுத்து சேறு பூசுவது வாடிக்கையாகிவிட்டது.

சூடான அரசியல் வாதங்கள் ஓய்ந்து நாளை வாக்களிப்பு, மறுநாள் முடிவுகள். வாக்குச்சாவடி வன்முறையில் சென்னையை விட பலவருடங்கள் பிந்தி உள்ளதால் அமைதியாக நடைபெறும் என நம்புகிறோம். என்ன, நீண்ட வார இறுதி எடுத்துக்கொண்டு அடுத்துள்ள மகிழ்விடங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் :)

காலிலே கல்வண்ணம் கண்டார் !

கால் கொலுசிலிருந்து மாணிக்க கற்கள் சிதறுவதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். காலிலிருந்தே கற்கள் சிதறினால்...சிடி சுஹானா சாடோன் என்கிற மலேசிய இளம்பெண்ணின் காலடியிலிருந்து தோல் பிளவுபட்டு கற்கள் வெளிப்படுகின்றனவாம். மலேசியாவின் தி நியூஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இந்த 23 வயது பெண்ணின் காலில் விளைந்த கற்களைப் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இரப்பர் இறக்கும் தொழிலாளியான அவரது அன்னை காமிரியா, விளம்பரத்திற்காக இல்லை,பெண்ணின் நோயும் வலியும் தீர யாராவது தீர்வு சொல்வார்களோ என்றே ஊடகங்களை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். இருப்பினும் TV3 நிகழ்ச்சியில் வந்தபிறகு சிடி ஓரிரவில் ஒரு சூப்பர்ஸ்டாராகி உள்ளார்.

தனது பேட்டியில் சிடி சாதாரணமாக நாலைந்து கற்கள் வருவதாக கூறினாலும் கடந்த சிலநாட்களாக இரு கோலிகுண்டு அளவு கற்களே வெளிவந்துள்ளன.கற்கள் வெளிவருமுன் குமட்டலும் பல்வலியும் ஏற்படுவதாக கூறுகிறார். பிரசவ வலிபோல், அந்த சமயம் கற்கள் வெளிவந்தால் போதும் என்பது போல் வலிப்பதாகவும் கூறுகிறார். அவர் தூக்கத்தில் இருக்கும் போதும் கற்கள் வெளிப்படுவதாகவும், பெரிய கற்களாக இருந்தால் நோண்டி எடுக்கவேண்டியிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

மருத்துவர்களின் எக்ஸ்ரே சோதனைகள் எந்த ஒரு அசாதரண நிலையையும் காட்டவில்லை.கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்த வியாதி(?) இருப்பதாகத் தெரிகிறது.

விக்கிபீடியாபடி முத்துக்கள் உருவாவது எப்படி:

"முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி (mollusc) உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கல்சியம் காபனேற்றையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் (mother-of-pearl) என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது."

ஒருவேளை இவர் உடலுக்குள் இத்தைகைய உயிரினம் ஏதாவதொன்று பாரசைட்டாக ஊடுறுவியுள்ளதோ ?

இவர் தமிழகம் வந்தால் காலடியில் கற்கள் எழுகின்றனவோ இல்லையோ 'பக்தர்கள்' விழுவது நிச்சயம்.

ஐஸ்-அபிஷேக் நிச்சயதார்த்தம்!

வருகிறது, வருகிறது என்று எதிர்பார்த்திருந்த அந்த செய்தி கடைசியில் வந்தே விட்டது. நேற்று, ஞாயிறு இரவு, அமிதாப் பச்சனின் இல்லத்தில், நெருங்கிய உறவினர், நண்பர்கள் முன்னிலையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயின் விரலில் மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பாலிவுட்டின் 'கிசுகிசு'க்களில் பேசப்பட்ட அவர்கள் காதலை் கனடாவில் நடந்த குரு பட சிறப்பு வெளியீட்டின்போது அபிஷேக் ராயிடம் 'அந்த' கேள்வியை கேட்டு நிச்சயித்துக் கொண்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. கனடாவிலிருந்து ஊர் திரும்பிய சிலமணி நேரத்திலேயே இந்தியாவின் பிராஞ்சிலினா ஜோடியாக அறியப்படும் காதலர்களின் திருமணத்தை நிச்சயம் செய்து அமிதாப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார். ஐஸ்வர்யா ராயின் செயலரும் இதனை ஊர்ஜிதப் படுத்தியுள்ளார். மணநாள் இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளைய அபிஷேக் பிப்.5 அன்று 31 வயதைக் கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யா ராயின் செவ்வாய் தோஷத்திற்காக மதுரை, வாரணாசி கோயில்களில் அவரும் அமிதாப் குடும்பத்தினரும் விசேட பூசனைகள் மேற்கொண்டார்கள். புஷ்கரில் உள்ள ஒரே பிரம்மாவின் கோவிலுக்கும் அமிதாப் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த சமயத்தில் அஜ்மீர் தர்காவிற்கும் சென்று வேண்டினர். இது போதாது என்று வரும் நாட்களில் குருவாயூருக்கு அவர்கள் குடும்பத்தினருடன் செல்லவிருக்கிறார். அங்கு அமிதாப் கோவிலுக்கு யானை வழங்கி பிரார்தனை செலுத்தவிருப்பதாக கேரள செய்திகள் கூறுகின்றன.மனம் விரும்பிய மணவாளனை கைபிடிக்க இப்பொழுதே மாமனார் மெச்சிய மருமகளாக நடந்து கொள்கிறார்.

சல்மான்கான், விவேக் ஓபிராயுடன் இணைந்து பேசப்பட்டவர் ராய். இதுபோல கரிஷ்மா வுடன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்து மனமுறிவு கொண்டவர் அபிஷேக். இந்த உறவாவது இருவருக்கும் இனிதே அமைய நமது வாழ்த்துக்கள் !!

ஐ! போன் !!

நம்மில் பெரும்பான்மையானவர்கள் கணினி என்றவுடன் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையே அறிவோம். ஐபிஎம் நிறுவனத்தின் தாராளமயமாக்கல் கொள்கையால் இயங்குதள மென்பொருளில் தனியாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட்டின் முதல் போட்டியாளராக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. தாங்களே அடிப்படை 'சிப்'பிலிருந்து இயங்குதளம், பயனர் மென்பொருள் வரை உருவாக்கியதால் அவர்களது கணினி விலை அதிகம். இருப்பினும் வடிவமைப்பில் முன்னோடியான பல நுட்பங்களை கொண்டுவந்து தங்கள் போட்டியாளர்களை திணற அடிப்பார்கள். அசைகலை,வரைகலை நிரல்களில் அவர்களின் முதன்மை இன்றைய அச்சு ஊடகத்துறையில் அவர்களிருக்கும் மதிப்பினாலேயே தெரியவரும்.

விலையினால் போட்டியிடமுடியாதிருந்த காலகட்டத்தில் அவர்கள் அப்போது வந்த Flash drive நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டுவந்த எம்பி3 (mp3) செயலி ஐபொட் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்தது. அதனுடன் மக்கள் அதிகம் விரும்பும் இசையை காசுகொடுத்து தரவிறக்கம் செய்துகொள்ள அமைக்கப் பட்ட iTunes தள விற்பனையும் கீழே சென்று கொண்டிருந்த நிறுவன விற்பனையை கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்ல வைத்தது.கணினிக்கு எலிக்குட்டியை(நன்றி,டோண்டு) (mouse) அறிமுகப் படுத்தியவர்கள், ஐபொட்டிற்கு clikwheel எனும் சுழல்பொத்தானை அறிமுகம் செய்தார்கள்.இவை இவர்கள் கணினி நுட்பவியலில் வழக்கமான வழியிலேயே செல்லாமல் புதிதாக சிந்திப்பதை எடுத்துக்காட்டும்.

வருடாவருடம் விற்பனைக்கு கொண்டுவரப்போகும் கருவிகளை அவர்களது மாக்வொர்ல்ட் என்னும் பொருட்காட்சியில் அறிமுகப் படுத்துவார்கள். இன்றைய தினம் அந்தப் பொருட்காட்சியில் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முக்கிய (keynote) உரையில் மக்களை ஏமாற்றவில்லை. ஐபொட்டின் வளர்ச்சியாக ஃபோன், ஐபொட் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய கணினி என மூன்றையும் உள்ளடக்கிய ஐபோன் என்ற கருவியையும் ஆப்பிள்டீவியையும் விவரித்த அவரது உரை கேட்டவரை திக்பிரமையடைய வைத்தது.

செல்பேசி என்றாலே எண்களின் பொத்தான்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த குழப்பமேயில்லாது முழுவதும் காட்டுதிரை(display screen) யாக இருந்தால்.. சரி, stylus வைத்து தொடுவதா, அந்தக் குச்சியை நான் தொலைத்து விடுவேனே... அதுவும் இல்லாமல் multi-touch என்ற முன்னோடியான தொழிற்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். $499 (4 gig)/$599 (8 gig) க்கு விற்பனையாகவுள்ள இந்த செல்பேசிகள் ஆப்பிளின் OSX இயங்குதளத்தில் வழக்கமான நிரலிகளுடன் அமைவதுடன் WiFi மூலம் இணையத்துடனும் தொடர்பு கொள்ளும்.தவிர
2மெகாபிக்சல் காமெரா, இசை,திரைப்பட செயலிகள் கொண்டிருக்கும். பேசிகொண்டிருக்கும்போதே மின்னஞ்சலோ நிழற்படமோ அனுப்பவியலும். நிச்சயமாக இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல்வரிகளையும் இறுதிவரிகளையும் அடுத்த சிகரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது.

பில் கேட்ஸுக்கு டாட்டா ?


தமிழ்நாட்டிற்கு மிகுந்த கோலாகலத்துடன் வந்து முதல்வரை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதாக கூறியிருந்த பில் கேட்ஸின் மைக்ரோசஃப்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக தமிழக அரசு திறமூல இயங்குதளமான லினக்ஸ் வகை வினியோகங்களை தங்கள் மின் அரசாண்மை ( e-governance) முயற்சிகளுக்கு பயன்படுத்தப்போவதாக குருபிரசாத் பதிவில் கூறியுள்ளார். தனது பத்திரிகை பேட்டியில் எல்காட் நிறுவன தலைவர் திரு. உமாசங்கர் மைக்ரோசஃப்ட் நிறுவன அதிகாரிகளை தான் எவ்வாறு எதிர்கொண்டார் என விவரித்துள்ளார். ஆயினும் பள்ளிகளுக்கு Suse Linux என்று சொல்லும்போது அரசு திறமூல மென்பொருட்களை(OSS) ஆதரிக்கிறது; ஆனால் இலவச திறமூல மென்பொருட்களை (FOSS)இல்லை என்னும்போது Novel நிறுவனத்தின் மீது ஐயம் எழுகிறது. இருப்பினும் முதன்முயற்சியில், பயிற்சி இல்லாதநிலையில், ஒரு நிறுவன ஆதரவு வேண்டும் என்பதால் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.

பில் கேட்ஸ் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு என்ன நேரப்போகிறது என்றும் ஆவலும் கவலையும் ஏற்படுகிறது. திறமூல மென்பொருள் வல்லமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வேலைகளை உருவாக்குமா அல்லது உலகின் சர்வாதீன மென்பொருள் வேலை வாய்ப்புக்களை கொடுக்குமா என்ற Hobson's choce இல் முடிவெடுப்பது கடினம்தான். திரு உமாசங்கரின் பேட்டியை நோக்கும்போது இது ஒருவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஏதெனும் சங்கேதமோ என்ற சந்தேகம் நம் அரசியல் வரலாற்றால் எழுந்தாலும் இந்த முடிவு நிலைக்கும் என்று எண்ணி தமிழக அரசை பாராட்டுவோம்.

கேரள அரசு பள்ளிகளில் லினக்ஸ் கொணர்ந்ததைப் பற்றி சக பதிவர் கே.சுதாகர்(ஸ்ரீமங்கை)யின் பதிவுகள் இங்கே: சுட்டி 1, சுட்டி2, சுட்டி3

நொய்டா கொலைகள்


கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள உடற்சிதிலங்கள் நம்மிடையே திகழும் வக்கிர உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கொலையின் கோரங்கள் தெரியத் தெரிய மனம் பதறுகிறது. பச்சிளம் சிறாரை வன்புணர்ந்து கொலை செய்து பங்களாவின் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் வீசி எறிந்ததாக தொழிலதிபரான மொஹிந்தர் சிங்கும் அவர் வேலையாள் சுரிந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகளின் பின்னணி குறித்து பல கருத்துக்கள் யூக வடிவிலே வலம் வருகின்றன. சில மனித உறுப்புக்களை விற்பதற்காகவென்றும் சில பயங்கரமான மத சடங்கிற்காகவென்றும் வேறு சில உயிரற்ற சடலங்களுடன் கொள்ளும் பாலியல் இச்சை (necrophilia)களுக்காக வென்றும் பலவாறு செய்திகள் வருகின்றன. எதுவாக இருப்பினும் மிகுந்த மன விகாரமடைந்த மனிதனின் செயல்கள் இவை என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

ஆனால் இந்த விகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் நிற்கிறதா என நம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலையுண்டவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டும், குற்றத்தைப் பதிவு செய்யாமல் அவர்களை ஏளனமாகப் பார்த்த காவலர்களின் மனம் கல்லாயிற்றா ? இது ஏதோ வடக்கில் சிறு கிராமத்தில் நடந்த ஒரு விலக்கு என்று நம்மில் யாரேனும் கூற முடியுமா? நாளும் எல்லா இடங்களிலும் நம் காவலரின் அலட்சியமும் ஆர்வமின்மையும் காண்பதுதானே ?

சரி, காவலர்கள் தான் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்தார்கள் என்றால் உள்ளாட்சி துப்புறவு தொழிலாளர்கள் அத்தனை மனிதகழிவுகள் கோணிப்பைகளில் அந்த வீட்டினருகே சாக்கடையில் போடப்படுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தனர் ? ஏதோ தவறு அருகாமையில் நடக்கிறது என்று காவலரை உஷார்படுத்தியிருக்கலாமே ?

இதெல்லாம் விட்டாலும், அந்த வீட்டின் அக்கம்பக்கத்துக்காரர்களும் தங்கள் சுற்றுவட்டாரத்தில் நடப்பதை காணாமல் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்த கிராமத்திலேயே இந்த நிலை என்றால் அடுத்தவர் யாரென்றே அறியாது வாழும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொல்லவே வேண்டாம்.

இதற்கெல்லாம் சிகரமாக பாதிப்படைந்த பெற்றோரும் மற்றவர்களும் தங்கள் கோபத்தை நேரடியாக மொஹிந்தர் வீட்டின் மீது கல்லெறிந்து நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதி மீது தங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையையும் நமது காட்டுமிராண்டித் தனத்தையும் பறை சாற்றியிருக்கிறார்கள்.

குற்றவிசாரணையும் நீதிவழங்கலும் துரிதப் படல் வேண்டும்; தவறிழைத்த அலுவலர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்; மேலாக குடிமக்கள் இயந்திரதனத்தில் சிக்கி நம் பொறுப்புக்களை மறக்கிறோமா எனவும் சிந்திக்க வேண்டும்.