சசியை தோற்கடித்த சந்திரன்!


ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலர் பதிவிக்கான போட்டியிலிருந்து திரு சசி தரூர் விலகிக் கொண்டிருக்கிறார். இது பற்றிய எனது முந்தைய பதிவு. அப்போதே அவரது வெற்றி பற்றி ஐயம் இருந்தது. இன்று அவை துரதிருஷ்டவசமாக உண்மையாயின.

சசி தரூரின் போட்டி விலகலுக்கான பேச்சு :

மூன்று முன்வாக்கெடுப்புகளிலும் முண்ணனியில் இருக்கும் தென்கொரியாவின் பன் கி மூன் (Ban Ki Moon) அக்.9 அன்று formalஆக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.இப்போது கூட புதிய முகம் ஒன்று போட்டியிட தேர்தல்விதிகள் வாய்ப்பளிக்கின்றன. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவும் ஒருவர் வாக்களிக்காமலும் பன் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். நமது தரூருக்கு 10 பேராதரவு கிடைத்து ஒரு வெடொஎதிர்ப்பு உட்பட மூவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் தரூரைத் தவிர தாய் துணை பிரதம மந்திரி, ஜோர்டானின் ஐநா தூதுவர், லாட்வியாவின் அதிபர்,ஆப்கனின் முன்னாள் நிதி அமைச்சர் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

திங்களன்று எட்டாவது ஐ.நா பொதுசெயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள திரு.பன் விவசாயக் குடும்பத்தில் 1944இல் பிறந்தவர்.பன்னாட்டு உறவுகளில் பல்கலைக் கழகத்தில் முதன்மை மாணவராக திகழ்ந்தவர், தென் கொரியாவின் வெளியுறவுத் துறையின் பல பொறுப்புகளை வகித்தவர். தென்கொரியாவின் ஐநா தூதுவராக 2001இல் இருந்தவர். ஆங்கிலம் தவிர பிரென்ச், ஜெர்மன் மற்றும் ஜபானிய மொழிகளில் பரிச்சயம் கொண்டவர்.

இலண்டன் டைம்ஸ் பத்திரிகை அவர் பதவி பெற தென்கொரியா ஏராளமான பண உதவிகளை ஆப்பிரிக்க ஏழைநாடுகளுக்கு உறுதி அளித்து 'தூண்டுவதா'க கூறியுள்ளது. அமெரிக்கா தனது 'வெடொ' அதிகாரத்தினால் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை விட இது உலகிற்கு நன்மையானதே. தான்ஜானிய மக்களின் பசிப்பிணி நீங்கினால் அவர் பதவி ஏற்பதற்கு முன்பே ஐநாவின் பணி துவங்கி விட்டதாகத் தானே பொருள் ;) இத்தகைய செயல்களால் இனி கோஃபி அன்னன் தான் எழைநாட்டிலிருந்து பணியாற்றிய கடைசி ஐநா பொது செயலராக இருப்பார் எனத் தோன்றுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இத்தோல்வி நமது வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமே. அணிசேரா நாடுகளின் தலைமையாக இருந்து பல நாடுகளின் உற்றநண்பனாக இருந்த நிலையை நழுவ விட்டு 'அரசனை' நம்பி புருசனை கைவிட்டோமோ என சிந்திக்க வேண்டிய சமயமிது.

4 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

//'அரசனை' நம்பி புருசனை கைவிட்டோமோ என சிந்திக்க வேண்டிய சமயமிது.//

நல்லா சொன்னீங்க...

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன். முதலில் ஒரு முழுநேர வெளியுறவு அமைச்சர் வேண்டும் :(

Boston Bala கூறுகிறார்

---முதலில் ஒரு முழுநேர வெளியுறவு அமைச்சர் வேண்டும்----

hmmm :)

---அமெரிக்கா தனது 'வெடொ' அதிகாரத்தினால் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை---

US did exercise its -ve feelings towards Sashi by voting against him in the Security Council session.

With North Korea ready to test its Nuclear capabilities, US might have felt a South Korean might be apt for the job?

மணியன் கூறுகிறார்

வாங்க பாஸ்டன் பாலா. நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்கா எப்பொழுதும் தனக்கு சாதகமான முடிவை எடுக்கிறது, ஆனால் இந்தியா நிஜத்தை உணராமல் மாயவலையில் சிக்குகிறதோ என பழைமைவாதிகள் பயப்படுகிறோம்.