சசி தரூர்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாளராக இருந்து வரும் கானாவின் கொஃபி அன்னனின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. இது அவரின் இரண்டாவது பணிக்காலமாகும். ஆகவே அவரது பதவியிடத்தை நிரப்ப உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இம்முறை பிராந்திய சுழற்சிபடி ஆசிய குடிமகன் ஒருவர் அப்பதவியை ஏற்க இந்தியா ஆசியநாடுகளை அணுகி வருகிறது. இந்த சூழ்நிலையில் சசி தரூர் என்ற தென்னிந்தியரை இந்திய அரசு கடந்த வியாழனன்று பரிந்துரைத்துள்ளது. எப்போதும்போல பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கோஃபி அன்னனும் புதிய செயலாளர் ஐநா வில் வேலை செய்யாத வெளிமனிதராகவும் ஆசிய குடியுரிமை பெற்றவராகவும் இருத்தல் நலம் என மொழிந்திருக்கிறார். இந்நிலையில் பலவேறு அரசுகளின் பரிந்துரைகள் மற்றும் ஆதரவு திரட்டல் மூலம் அக்டோபர் இறுதியில் யார் பெயர் முன்மொழியப்படும் எனத் தெரிய வரும்.

தற்சமயம் ஐ.நா வில் உதவி செயலாளராக (Under Secretary General) பணிபுரியும் தரூர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். 1956இல் இலண்டனில் பிறந்த இவரது தந்தையார் ஒரு பத்திரிகை அதிகாரி.தாயார் இல்லத்தரசி. பள்ளிக்கல்வியும் பட்டக்கல்வியும் மும்பையிலும் கொல்கொதாவிலும் தில்லியிலுமாக முடித்து தில்லியின் பிரபல செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். பாஸ்டனின் டஃப்ட்ஸ்(Tufts University) பல்கலையில் மேற்படிப்புக்காக சென்றார்.இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகளையும் வெளியுறவுத்துறையில் டாக்டர் பட்டமும் தனது 22 வயதிலேயே முடித்தார்.

1978 வருட முதல் ஐநாவின் சேவையில் பணியாற்றிவரும் தரூர் வெவ்வேறு நிலைகளில் பணிக்களங்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது மொழியாற்றலின் அடிப்படையில் ஐநாவின் தகவல் மற்றும் செய்தி ஒருங்கிணைப்பாளராக உதவி பொது செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். ஐநாவின் பன்மொழி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். நிறைய புத்தகங்கள், சிறுகதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள், இலக்கிய ஆய்வுகள் எழுதியுள்ளார். நமது இந்து நாளிதழிலும் பத்தி எழுத்தாளராக உள்ளார். நமது இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை ஆய்ந்துள்ளார். தவோஸில் நடந்த உலக பொருளியல் குழு அவரை வருங்கால உலகளாவிய தலைவராக தெரிந்தெடுத்துள்ளது.

அவர் எழுதிய எட்டு புத்தகங்களில் இந்திய வெளியுறவு கொள்கைகளை ஆராய்ந்த 'Reasons of State' (1982), அரசியலைக் கிண்டல் செய்யும் 'The Great Indian Novel (1989)', 'The Five-Dollar Smile & Other Stories' (1990), பாலிவுட்டைத் தழுவிய 'Show Business' (1992) இந்தியாவின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது வெளியான 'India: From Midnight to the Millennium' (1997), மற்றும் நாவல்கள் 'Riot. A Love Story'(2001) and 'Nehru, the Invention of India' ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

திலோத்தமை என்ற பத்திகையாளர் மனைவியும் இஷான், கனிஷ்க் என்ற இரு மகன்களையும் கொண்டது அவரது சிறு குடும்பம். சிறுவயதிலேயே இந்தியாவை விட்டு வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வரும் தரூர் இந்திய பண்புகளில் ஆழமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பதும் இந்தியக் கலாசாரத்தின் தூதுவனாக விளங்குவதும் குறிப்பிடத் தகுந்தது.வரும் மாதங்களில் அவரது தேர்வு தேறுமா எனப் பார்ப்போம்.

4 மறுமொழிகள்:

நாகை சிவா கூறுகிறார்

மணியன்!
அவர் வருவதற்கான வாய்ப்புகள் எனக்கு தெரிந்த வரை அவ்வளவு பிரகாசமாக இல்லை. ஏற்கனவே ஜ.நா.வில் இந்தியர்கள் அதிகம் என்ற புகைச்சல் உண்டு. நம்மளை எல்லாம் இந்தியன் மாபியா என்று தான் அழைப்பார்கள். பார்க்கலாம். எனக்கு மேற்கொண்டு தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்கின்றேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க நாகை சிவா. ஆமாம், நீங்கள் ஐ.நா அதிகாரிதானே, உங்களுக்குத் தெரியாததா ? இந்த புகைச்சலால்தான் அன்னன் கூட சசியைப் பற்றி சொல்லும்போது முதலில் அவர் தனது வேலையில் கவனம் செலுத்தட்டும், பிறகு தேர்தலைப் பற்றிக் கவலைப் படலாம் என சொல்லியுள்ளாரோ ?

வஜ்ரா கூறுகிறார்

இந்த பதவி இந்தியாவிற்கு கிடைக்க வணங்கிக்கொள்கிறேன் என்ற போதும்...கிடைக்காமல் போய் தோற்றால் கேவலமான விஷயமாகும்...

நாம் எதாவது ஒரு அட்ரஸ் இல்லாத நாடாக இருந்துத் தொலைத்து...இது போல் தேர்தலில் தோற்றுப் போனால் செய்தியில் கூட வராமல் காணாமல் போய் விடும்...நாமோ, UN Security council க்கு அப்ளிகேஷன் அனுப்பிக் கொண்டிருக்கும் வல்லரசாகும் தகுதியுடய நாடு...நம் நிலையில் உள்ள நாட்டு பிரதிநிதி தோற்பது நல்லதல்ல என்றே எனக்குப் படுகிறது...

என்ன தான் சசி தரூர் ஒரு கடைந்தெடுத்த செகுலர்வாதி (Nehruvian secularist!!) ஆக இருந்தாலும், அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாளராவதில் நமக்குப் பெறுமையே..

மணியன் கூறுகிறார்

வாங்க வஜ்ரா சங்கர். நீங்கள் சொல்வதும் சரியே. இருந்தாலும் ஆழம் பார்த்தே காலை விட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக்குவதற்கு யோசிக்கும் வல்லரசுகள் இதனை ஒரு ஆறுதல் பரிசாக கொடுக்க உறுதி அளித்திருப்பார்கள் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விடுவதிலிருந்து தெரிகிறது.