Strawberry தேசம்

விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது "விடுமுறையை கழித்ததெப்படி " என்பதே முதல் கட்டுரைப் பயிற்சியாகவிருக்கும். நான் சென்ற இன்பச்செலவு என்று எழுதுகின்ற நேரத்திலே அது என்ன இன்பச் செலவு என கேள்வி கிளம்பும். இன்றைய மாணவர்கள் picnicஐ எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் படித்த முதல் பயணக் கட்டுரை திரு. சி.சுப்பிரமணியம் அவர்களின் ஆனந்தவிகடனில் வந்த தொடராகும். அதன் தொடர்ச்சியாக மணியனின் இதயம் பேசுகிறது பயணக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளின் பன்முகத்தன்மையை அறிமுகப் படுத்தின. சுற்றுலாப் பயணங்களிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தின. வருடம் ஒரு இடம் என்று குடும்பத்தினருடன் செல்கின்ற வழக்கமும் வந்தது.

சென்ற வார இறுதியில்,கோள்கள் அதிசயமாக சேர்வதுபோல்,மனைவி,மகள், மகன் சேர்ந்ததைக் கொண்டாடும் வகையில் எல்லோரும் அருகாமையில் அமைந்த மகாபலேஷ்வர் என்ற மலைமகிழ்விடத்திற்கு செல்ல விழைந்தோம். மழைக்காலம் தொடங்கும் இந்நேரம் பயணிப்பதற்கும் அழகை ஆராதிக்கவும் சரியானதில்லை என அண்டைவீட்டாரும் நண்பர்களும் சொன்னாலும், கொட்டுகின்ற மழையை கூடத்திலிருந்து பார்த்தாலும் குடும்பத்தினர் கூடி இருப்போமே என்று எண்ணி பயணப்பட முடிவெடுத்தோம். இருப்பினும் சாலைகள் மோசமாக இருக்குமென வாடகை வண்டியை எடுத்துக் கொண்டோம். புனெ விரைவுத்தடத்தில் அதிவேகத்தில் செலுத்த எண்ணியிருந்த மகனுக்குத் தான் வருத்தம்.

நாங்களிருந்த புதுமும்பையின் புறநகர்ப் பகுதியிலிருந்து புனெயை ஒன்றரைமணி நேரத்தில் கடந்து புனெ-சென்னை புனரமைக்கப்படும் தங்கநாற்கர சாலையில் பயணித்து போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஒரு சாலைப்பிரிவில் மலையேறினோம். மதியம் பனிரெண்டு மணிக்கு ஓட்டலில் செக் இன் செய்யும்போது, அப்பாடா, மழை இல்லை என்று சொன்னது காதில் விழுந்தாற்போல சடசடவென்று பலத்த மழை. வந்த சிரமம் ஆற்றிக்கொண்டு மதிய உணவும் முடித்துக் கொண்டு மழை நிற்குமா வெயில் வருமா என காத்துக் கொண்டிருந்தோம். இதற்கிடையே மழையில் கோவில்களை முடித்துவிடலாம் என்ற மக்களின் விருப்பப்படி, கொட்டும் மழையில் பஞ்சகங்கா ஆலயமும் மகாபலேஷ்வர் என்ற சிவன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பஞ்சகங்கா கோவில் கிருஷ்ணா,வெண்ணா, சாவித்திரி, கோய்னா, காயத்திரி என்ற ஐந்து நதிகள் பிறப்பிடமாக கூறுகிறார்கள். அதேபோல் மகாபலேஷ்வர் இலிங்கமும் தானே சுயம்புவாக உருத்திராட்ச அமைப்பில் தோன்றியதாக சொல்கிறார்கள். இரண்டும் புராதன கோவில்கள்.என்ன ஆச்சரியம், வெளியில் வந்தால் மழையும் நின்றிருந்தது. உடனே அங்கு காண வேண்டிய பாயின்ட்களை(!) ஆய்வு செய்தோம். அங்கு ஒவ்வொரு காட்சியிடங்களையும் ஏதாவது ஐரோப்பிய பெயரிட்டு வில்சன் பாயின்ட்,கேட்ஸ் பாயின்ட் என்று சொல்கிறார்கள்.மதனகாமராஜனின் கம் டு த பாயின்ட் நினைவிற்கு வந்தது. பாயின்ட் பை பாயின்ட்டாக பார்த்துவிட்டு விடுதிக்கு மனநிறைவோடு திரும்பினோம். மலைமுகட்டிலிருந்து பசுமையான மலைப்பிரதேசங்களை பார்ப்பது இரம்மியமாக இருப்பதோடு மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது. காரை நிறுத்திவிட்டு ஒவ்வொரு இடத்திற்கும் நல்ல நடை வேறு, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுத்தது.

மறுநாள் காலையில் அங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் இருந்த வீர சிவாஜியின் பிரதாப்கட் கோட்டைக்குச் சென்றோம். ஒரு குன்றின் உச்சியில் அமைக்கப் பட்டிருந்த அந்தக் கோட்டைக்கு மேலே அதன் வாயில் வரை செல்ல மலைப்பாதை இருக்கிறது. கோட்டைக்குள் சிவாஜி வழிபட்ட மா பவானி கோவில் உள்ளது. அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தளமாயினும் விவரப் பலகைகள் எதுவும் காணவில்லை. வழிகாட்டிகளின் தொந்திரவு அதிகமாயிருந்தது. அதிகாரபூர்வ கட்டணமாக ரூ80/- தீர்மானித்திருந்தார்கள். எங்களுக்கு விருப்பமில்லாவிடினும் ஒரு வயதானவர் மேல் பரிதாபப் பட்டு நியமித்துக் கொண்டோம். (படத்தில் பழங்கால கருவிகளுடன் இருப்பவர்.) மனிதர், ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் வரலாற்றைப் பிழிந்து விட்டார். தங்கள் மண்ணின் பெருமையை எல்லாம் பொருமித் தள்ளி விட்டார். அங்கு ஔரங்கசீப்பின் தளபதியாக சமாதானத்திற்கு வந்து தன்னைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஆறரை அடி அஃப்சல்கானை ஐந்தரை அடி சிவாஜி எப்படி புலிநகங்களைக் கொண்டு கிழித்தார் (literally) என்பதை நாடகமாகவே நடத்திக் காட்டினார். எனக்கு கள்ளபார்ட் :) இங்கும் ஒரு பாயின்ட் உள்ளது, பனிஷ்மென்ட் பாயின்ட். அங்கு எதிரிகளை கோணிப்பையில் இட்டு மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடுவார்களாம். மற்றபடி அங்கும் இயற்கையழகை முழுமையாக இரசித்துவிட்டு விடுதி திரும்பினோம்.

மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்த வெண்ணா ஏரியை பார்த்துவிட்டு, அங்கிருந்த ஸ்ட்ராபெர்ரி பண்ணையை நோக்கம் விட்டோம். அப்போதைய (fresh) ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் கிரீம் கலந்து மகனும் மகளும் கலக்க நான் நாவல்பழங்களை இரத்தத்தின் இனிப்பைக் குறைக்க சுவைத்தேன். வீட்டிற்கு ஜாம்,ஜெல்லி, ஜூஸ் என ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, கோகம் (நம்ம ப்ளம்ஸ்)பழரசங்களை வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து பஞ்சகனி என்ற ஊரின் பாயின்ட்களையும் பார்த்தவாறு ஊர் திரும்பலானோம்.

திரும்பும் வழியில் புனெ- சதாரா NH4 சாலையில் கெத்காவலெ என்ற சிற்றூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் பற்றி கேள்விப்பட்டு சென்றோம். இங்கெல்லாம் வெங்கிஸ் சிக்கன் என பதப்படுத்தப்பட்ட கோழியை விற்கும் வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸின் அதிபர் டாக்டர் பி.வி.ராவின் கனவாக திருமலா-திருப்பதியின் நகலாக இக்கோவில் கட்டப் பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து பூசாரிகளும், இலட்டு பிடிப்போரும் மாலை தொடுப்போரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். ஏராளமான அலுவலர் கோவிலை தூய்மையாக வைத்திருக்கவும் வரும் பக்தர்களை சீரமைப்பதிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எங்கேயோ இருந்தாலும் பாலாஜி என்றாலே கூட்டமும் வரிசையும் தான். தரிசனம் முடிந்ததும் சூடான பூந்தி கொடுத்தார்கள். அதனுடன் கடந்த இருநாட்களின் காட்சிகளையும் அசை போட்டவாறே புனெ-மும்பை விரைவுப் பாதையை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

16 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

சார்,

மிக அருமையான பதிவு.

மிக்க நன்றி!!

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.

Unknown கூறுகிறார்

மணியன்,

உங்கள் பயணத்தை அழகாக விவரித்து விட்டீர்கள்...

நீங்கள் சொல்லுமிடங்கள் ஹைதராபாத்தில் இருந்து எவ்வளவு தொலைவிருக்கும்?? தெரிந்தால் சொல்லுங்களேன்...

மணியன் கூறுகிறார்

அமராவதி மனோகரன், ஹைதராபாத்திலிருந்து புனெ (548 கி.மீ) வந்து பிறகு புனெ -சதாரா சாலையில் 120 கி.மீ செல்லவெண்டும்.

இரா. செல்வராசு (R.Selvaraj) கூறுகிறார்

நல்ல கட்டுரையும் படங்களும். Straberry தேசம் என்பது முழுமையாகப் பொருந்தாத தலைப்பு என்றாலும் நினைவில் இருக்கும். (மகாபலேஷ்வர், சிவாஜி என்று எவ்வளவோ சொல்லியிருக்கீங்களே!)

அந்தப் பக்கமாக என்றாவது பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் பதிவைத் தேடிப் படித்துக் கொள்ள எண்ணம்.

வெங்கடாசலபதி பெயராலேயே வெங்கி'ஸ் சிக்கன் என்னும் தகவல் சுவாரசியமாக இருக்கிறது! :-)

மலைநாடான் கூறுகிறார்

மணியன்ஐயா!

மலைகளும், கோட்டைகளும், எனக்குக் கொள்ளைப்பிரியம். சிவாஜி கோட்டை என்று சொல்லிவிட்டீர்கள். சந்தர்பம் வரும்போது பார்த்தே ஆகவேண்டும்.
பகிர்வுக்கு நன்றி.

உங்கள் ஆறுவது சினம் பதிவின் பின்னூட்டங்களில் ஒன்றைத்தவிர, மற்றவை படிக்க முடியவில்லை. என்ன காரணம்?

உங்கள் அழைப்பை ஏற்று ஆறு பதிவு போட்டாயிற்று பார்த்தீர்களா?

இலவசக்கொத்தனார் கூறுகிறார்

நல்ல படங்கள். நல்ல தகவல்கள். மொத்தத்தில் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மணியன்.

மணியன் கூறுகிறார்

செல்வராஜ், மகாபலேஷ்வர் பகுதியில் ஸ்ட்ராபெர்ரி பழ பண்ணைகள் பிரசித்தம். அதனால் அந்தப் பிரதேசம் ஸ்ட்ராபெர்ரி பிரதேசம் என வழங்கப் படுகிறது. அதனை கட்டுரையில் சரிவரக் கொண்டுவரவில்லை :(
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மணியன் கூறுகிறார்

மலைநாடான், உங்கள் ஆறு பதிவை இப்போதுதான் பார்த்தேன். மலைகளின் மேல் உங்களுக்குள்ள காதல் உங்கள் பெயரிலேயே தெரிகிறதே!
எனக்கு ஆறுவது சினம் பதிவு முழுமையாக வருகிறதே!

மணியன் கூறுகிறார்

வாங்க இலவசக்கொத்தனார், உங்கள் முதல்(?) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) கூறுகிறார்

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதி.

Unknown கூறுகிறார்

சுவாரசியமா இருந்தது.

மணியன் கூறுகிறார்

நன்றி வெங்கட்ரமணி.

Chellamuthu Kuppusamy கூறுகிறார்

புகைப்படம் இணைத்தது பதிவுக்கு மேலும் அழகு....

மணியன் கூறுகிறார்

நன்றி குப்புசாமி செல்லமுத்து.