டாலர் கடவுள்கள்
சென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் அங்காடிக்குச் சென்று மூன்றுதளங்களில் வைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களையும் கடவுள் பொம்மைகளையும் கண்டு இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்றாகும். மற்றவர்கள் புத்தகக் கடைகளிலும் பொருட்காட்சிகளிலும் செலவிடுவதைப் போன்று எனக்கு இத்தகைய கைவினைப் பொருட்களை பார்வையிடுவதிலும் சேர்ப்பதிலும் (வீட்டுஅதிபர் அனுமதிக்கும் எல்லைவரை) ஆர்வமுண்டு. நமது கடவுளர் சிலைகளை வெவ்வேறு நிலைகளிலும் பாவங்களிலும் அழகாக வடிவமைத்து நமக்கு பக்தி பரவசப்படுத்துவர். மண்பொம்மைகளின் கனம் குறித்தும் உடையும் தன்மை குறித்தும் வீட்டினர் குறை சொன்னாலும் அதனை அழகாக வார்த்து வண்ணம் பூசிய பரிச்சியமில்லாத அந்தக் குயவனாரிடம் மனம் பறிகொடுப்பேன்.
நவராத்திரி பண்டிகை சக்தியைப் போற்றவும் கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதற்காகிலும் இந்தப் பொம்மைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிக் கொணரும் ஒரு பண்டிகையாகும். கொலு வைப்பதே கடினமாகிவரும் இந்நாட்களிலும் வாயிலறை காட்சிப்பெட்டியில் வைத்திட சிறிய பளிங்கு, டெர்ரகோட்டா பொம்மைகள் விரும்பப் படுகின்றன. சென்றவிடங்களின் நினைவாக வாங்கிய சிறு பொம்மைகளும் இந்த இடத்திற்கு போட்டிப் போடுகின்றன.இவற்றினால் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து இந்தக் குடிசைத் தொழிலாளர்கள் நலிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து மலிவு விலையில் நம் கடவுள் சிலைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது மும்பையில் சீன பொம்மைகள் தான் அதிகம் விற்கப் பட்டன. இன்று கண்ட இச்செய்தி இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவின் பரிசுப்பொருட்கள் விற்கும் லெனக்ஸ் நிறுவனம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் நம் பொம்மைகள் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சிம்மி சோப்ரா என்ற இந்திய அமெரிக்கரின் அறிவுறுத்தலின்படி, மிக்கி மௌஸும் டொனால்ட் டக்கும் தயாரித்து வந்தவர்கள் கணபதி, துர்கா, இலக்குமி பொம்மைகளை தயாரிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளனர். ஆறுமாத சோதனைகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 15-அங்குலஉயரமும் 12அங்குல அகலமும், 24-காரட் தங்கப் பூச்சும் கொண்ட ஆயிரம் விநாயகர் சிலைகளை $2000க்கு வெளிக் கொணர்ந்துள்ளனர். விற்பனை வேகமெடுக்கும் போது சந்தையில் குவியப் போகும் இந்தப் பொம்மைகள் நம் கைவினை தொழிலாளர்களின் வாழ்விற்கு கேள்விக்குறி எழுப்பப் போகின்றன.
இன்று நெசவாளர்களின் அவலநிலைபோல நாளை இத்தொழிலாளர்களும் அரசு மானியத்தை எதிர்நோக்கி வாழவேண்டியதாயிருக்கும்.
2 மறுமொழிகள்:
கலைநயத்தோடு (?!) வித்தியாசமாக உருவாக்குபவருக்கு மதிப்பும் மடியில் ரொக்கமும் கூடும். மோல்டில் அச்செடுத்து வடிப்பவருக்கு பதிலாக மெஷின் தயாரிப்பதால், தரமும், உண்மையான வித்தகருக்கு மரியாதையும் அதிகரிக்கும்?
பாலா, நீங்கள் சொல்வதும் சரிதான். இருப்பினும் கைத்தறி நெசவாளர்போல் இந்தக் கைவினைதொழிலாளர்களின் கதியும் தொழில்நுட்பத்தால் பாதிக்கப் படுவது வருத்தமளிக்கிறது :(
மறுமொழியிட