சுவாமியே சரணம் !

பம்பா நதி கேரளத்தின் நீளமான நதிகளில் மூன்றாவது ஆகும். குட்டநாடு எனப்படும் கேரளாவின் நெற்களஞ்சியத்திற்கு உயிராதாரம். இந்நதிக்கரையில் தான் பந்தள மகாராஜா அய்யப்பனை மணிகண்டனாக கண்டெடுத்தார். இராமரும் இலக்குவனனும் கூட இந்நதிக்கரையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இங்கு மூதாதையருக்கு திதி கொடுப்பது விசேடமாக கருதப்படுகிறது.

நாங்கள் பம்பாவின் குளிர்ந்தநீரில் அசதி தீர குளித்துவிட்டு வண்டியிலிருந்த இருமுடிக் கெட்டுக்களை தலையில் சுமந்து கொண்டோம். மாலை ஆறுமணியளவில் பம்பையிலிருக்கும் கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற்றத்தின் முதற்கட்டமாக நீலிமலை ஏறத் தொடங்கினோம்.ஆரம்பக் காலங்களில் கல்லும் முள்ளுமாக இருந்த மலைப்பாதை இப்போது படிகளுடனும் காங்கிரீட் தரையுடனும் எளிதாக்கப் பட்டிருப்பினும் செங்குத்தான சரிவினால் (60 -70 டிகிரி) ஏறுவது சிரமமே. சற்று பணமும் வயதும் அதிகமாகத் தெரிந்தால் உங்களச் சுற்றி 'டோலி டோலி' என்று சூழ்ந்து விடுவார்கள். அவ்வாறு தூக்குபவர்கள் நம் மதுரை,நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நடைக்கு ரூ.800/-இலிருந்து ரூ.1200/-வரை ஆளைப் பார்த்து வாங்குகிறார்கள். சுப்பிரமணிய பாதை என்னும் டிராக்டர் செல்லும் மாற்றுப் பாதையும் உண்டு. மலையாள இயக்குனர் சுப்பிரமணியம் அய்யப்பனைப் பற்றி படம் எடுக்கும் போது போட்டதாம். மொத்த பயணதூரம் 6 கி.மீ.

நீலிமலையின் முகட்டிலே அப்பாச்சிமேடு என்னும் முதல் சமதளம் வருகிறது. இங்கு கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு, கொண்டுவந்த மாவு உருண்டைகளை சுவாமியின் பூதகணங்களுக்காக மூன்றுபக்கமும் விட்டெறிந்தோம். இங்கே ஒரு இதய கவனிப்பு மையமும் இயங்குகிறது. இதை அடுத்த முகட்டு சபரி பீடமாகும். இங்கு சபரி ஆசிரமம் இருந்ததாக ஐதீகம். கேரள கோவில்கள் காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் காட்டு விலங்குகளை விரட்டும் விதமாக வெடி வெடித்து இறைவனைக் கொண்டாடுவர். அத்தகைய வெடி வழிபாடு இங்கு நடைபெறுகிறது. சற்றே சமதளமான வழியில் மரக்கூட்டம் எனப்படும் அடுத்த இடத்தை அடைந்தோம். ஏராளமான அய்யப்பன்மார் கூட்டத்தில் வெவ்வேறு வேகத்தில் வந்த குழு உறுப்பினர்கள் இங்கு ஒன்று சேர்ந்து கொண்டோம்.

இங்கிருந்து சரங்குத்தி ஆலமரம் நோக்கி நடந்தோம். சற்றே செங்குத்தான பாதை, சீரமைக்கப் படாமல் கற்களுடன் இருந்தது. சுமார் ஒரு கி.மீ தூரம். இலேசான மழை இருந்ததால் வழுக்கவும் செய்தது. கன்னி அய்யப்பன்மார் ( முதன்முறையாக விரதமேற்று வருபவர்) எருமேலியில் கொச்சு அய்யப்பன் கோவிலில் இருந்து கொண்டுவந்த சரத்தை (அம்பை) இங்குள்ள ஆலமரத்தில் செருக வேண்டும். ஆலமரத்தைத் தேடும் நிலையில் உள்ளது. அனைவரும் இங்குள்ள தட்டியில் செருகிவிட்டுச் செல்கின்றனர்.

முதல் இரண்டுநாட்கள் கேரள சாலைமறிப்பால் நாங்கள் சென்ற அன்று நல்லக் கூட்டம். வரிசை சரம்குத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ இறக்கத்தில் சன்னிதானம் உள்ளது. பொற்கூரை வேயப்பட்ட சன்னிதானத்தை தரிசித்தவாறே இறங்கினோம். ஐம்பது ஐம்பது பேர்களாக தடுத்து ஆலய ஊழியர்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். கீழிருந்து மேலே வர இரண்டு மணி நேரமாகி இருந்தது. நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் ஒருமணி நேரம் ஆயிற்று. இரவு ஒன்பது மணியளவில் பொன்னு பதினெட்டாம் படிகளை அடைந்தோம். முன்பெல்லாம் நாம் எத்தனையாவது முறை செல்கிறோமோ அந்த படிக்கட்டில் தேங்காய் உடைப்பது வழக்கம். கூட்டம் அதிகரித்தபின் படியின் அருகாமையில் உடைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்தமுறை படியின் இரண்டுபக்கங்களிலும் உள்ள கருப்பண்ண சுவாமி சன்னதிகளுக்கு அப்புறம் உடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். குறுகலான செங்குத்தான பதினெட்டு படிகளில், கண்ணாடியை தூக்குப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, காவலர்கள் கை கொடுத்து ஏற்றிவிட மேலே வந்த கணங்களை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. சன்னிதானத்தின் முகப்பில் மீண்டும் குழுவினரை ஒன்றுசேர்த்து கோவிலை சுற்றிவந்த வரிசையில் ஒரு அரை மணிநேரம் காத்திருந்து இருமுடியுடன் ஐயன் அய்யப்பனை கண்ட ஓரிரு நிமிடங்களில் பட்ட துன்பமெல்லாம் பறந்தோடிப் போயிற்று. சன்னிதானத்திற்கு தென்மேற்கு திசையில் இருந்த கன்னிமூல கணபதிக்கு நன்றி சொல்லி கோவிலை விட்டு வெளியே வந்தோம்.

இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடத்தில் மீண்டும் குளித்து கொண்டுவந்த இருமுடிகளைக் களைந்து, தேங்காய்களை உடைத்து நெய்யை ஒரு தூக்குப்பாத்திரத்தில் நிரப்பினோம். மற்ற பூசை திரவியங்களையும் வகையாகப் பிரித்துக் கொண்டோம். அவல்பொரி, வெல்லம், உலர்திராட்சை போன்றவற்றைக் கலந்து சுவாமிக்குத் தயார் செய்தோம். பதினொருமணியளவில் கோவில் நடை அடைக்கும்போது ஹரிஹராசனம் பாடல் பாடியது அந்த சூழலில் இரம்மியமாக இருந்தது. நள்ளிரவிற்குப் பின்னால் நடந்த அசதியில் மனநிறைவோடு நன்றாகத் தூங்கி விட்டோம்.

மீண்டும் அதிகாலையில் எழுந்து நெய்யபிஷேக வரிசையில் நின்று சன்னதி வாயிலின் வலது புறம் கொடுத்துவிட்டு அப்பிரதஷிணமாக இடதுபுறம் வந்து நெய் பாத்திரத்தை வாங்கிக் கொண்டோம். இதனால் நாம் கொடுக்கும் நெய்யை அபிடேகம் செய்வதைக் காண முடியாது. நமக்கு முன்னால் கொடுத்தவருடையதைத் தான் பார்க்க முடியும். நெய் அபிடேகத்தைக் கண்டபிறகு மாளிகைப்புரம் சென்று கல்யாணத்திற்காக என்றும் காத்திருக்கும் அம்மனை தரிசித்து, தேங்காய் உருட்டி, மற்றும் அங்கிருந்த நாகர், நவக்கிரகங்கள் எல்லோரையும் வணங்கி வெளியே வந்தோம். உடைந்த நெய் தேங்காய் மூடிகளை பதினெட்டாம் படியருகே உள்ள ஆழியில் (அணையாத நெருப்பில்) இட்டோம். நெய் நமது ஆத்மாவாக இறையை சேர்கிறது என்றும் தேங்காய் மூடிகள் நம் உடலாக நெருப்பிற்கு இரையாகின்றன என்றும் குருசாமி சொல்வார். அருகிலிருந்த தேவஸ்வம் அலுவலகக் கவுண்டர்களில் பிரசாதமாக அரவணைப் பாயசமும் அப்பமும் வாங்கிக் கொண்டோம். திருப்பிக் கொடுக்கப்பட்ட நெய், அரிசிப்பொரி பஞ்சாமிர்தம், விபூதி,குங்குமம் ஆகியவற்றை இருமுடிப் பையில் முடிந்து கொண்டோம். மீண்டும் இருமுடிகலை தலையில் சுமந்தவாறு, ஐயனை ஒருமுறை தரிசித்து விட்டு, குறிப்பிட்ட இடத்தில் சிதறு தேங்காய் உடைத்து விட்டு கீழேஇறங்க ஆரம்பித்தோம். பதினெட்டுப் படிகள் வழியாகவே இறங்குவது இப்போதெல்லாம் இயலாமற் போயிற்று.

பனிரெண்டு மணியளவில் பம்பா வந்திறங்கி கேரள கப்பா, கஞ்சி சாப்பிட்டு வண்டி ஏறியது தான், நேராக பாலக்காடு இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு உடனேயே கோவை பேருந்தைப் பிடித்துக் கோவைக்கு நள்ளிரவில் திரும்பினோம்.

சுவாமியே சரணம் அய்யப்பா!!

4 மறுமொழிகள்:

VSK கூறுகிறார்

சுவாமியே சரணம் அய்யப்பா!
!
இவ்வருடம் என் அண்ணன் மறைவால் விரதம் இருக்க முடியாமல் போன குறையை நிவர்த்தித்து விட்டீர்கள்.

அய்யப்பனை நேரில் கண்ட திருப்தி!

வாழ்த்தி வணங்குகிறேன்!

சுவாமியே சரணம் அய்யப்பா!

மணியன் கூறுகிறார்

தடங்கல் இன்றி இந்த வருடமும் அய்யனைக் காண முடிந்தது அவன் அருளே! நன்றி SK.

குமரன் (Kumaran) கூறுகிறார்

மணியன் ஐயா. இருமுறை ஐயன் தரிசனம் இதுவரை கிடைத்துள்ளது. இன்று உஙகள் பதிவினைப் படித்து மூன்றாம் முறையும் தரிசனம் கிடைத்தது.

சுவாமியே சரணம் ஐயப்பா!

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன்.