சாந்திக்கு சபாஷ் !
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டிச.ஒன்றிலிருந்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகளைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்தப் போட்டியில் டென்னிஸ் அறிமுகமான பின்னர் தடகள போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் நம் இந்திய தடகள வீரர்கள் மனம் தளராமல் தஙகள் திறமைகளை சத்தமில்லாமல் வெளிப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனியன்று தமிழ்நாட்டின் சாந்தி சௌந்தரராஜன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமி.3.16 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். அதனை பாராட்டி முதல்வர் அவர்களும் பணமுடிப்பு அறிவித்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள்!!
அவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். உடன் மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் கொண்ட தங்கள் குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் தன் பந்தய ஓட்டத்தையே நிறுத்தவும் எண்ணியிருந்தார் என அறியும்போது மனம் பதைக்கிறது. புதுக்கோட்டையை அடுத்த காத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு செயின் ட் ஜோசஃப் பொறியியற்கல்லூரி தான் அவரது ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முயற்சிகளுக்கு துணைநின்றிருக்கிறது. இதற்கு முன் ஆசிய தடகள போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தாலும் இங்கு நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளில் சரிவர ஓடவில்லை. இதனால் ஏசியாட் குழுவில் இடம் பிடிப்பதும் கேள்விக் குறியாக இருந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் அவரது கனவை மெய்ப்பட வைத்திருக்கிறது.தன் முதல் சுற்றில் மெதுவாக ஓடியதே தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. தங்கத்தை மாரியம் யூசுஃப் ஜமால் என்ற பாஹ்ரைன் பெண் வென்றார்.
சாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். திறமையுள்ளவர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதே சிறந்த விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் வழியாகும்.
ஊடக வெளிச்சத்திற்காகவே நடவடிக்கைகள் மேற்கொண்டால் அடுத்த சாந்திகள் குடும்ப பாரத்தில் மேலே வரமுடியாமற் போகலாம்.
8 மறுமொழிகள்:
சாந்திக்கு என் சார்பிலும் ஒரு சபாஷ்.
ஒரு சாந்தியால் போராடி வெளிவந்து பதக்கம் வாங்க முடிந்திருக்கிறது. ஆனால்...
வாங்க செந்தில்குமரன். எதையுமே அழகாக திட்டமிட்டு வளர்ச்சிக்கு வழிகோலுவது இன்றி ஒரு போர்க்கால அவசரத்திலேயே நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் நலிவடைந்த சமுதாயத்திலிருந்து இத்தகைய திறமைகளை வெளிக் கொணர்ந்து பேணுவது இன்றியமையாதது. நமது முன்னுரிமைகள் தவறான திக்கில் வண்ண தொலைக்காட்சிகளில் தொலைக்கப் படுகின்றன.
மணியன் சார்
சாந்திக்கு எனது வாழ்த்துக்கள்!!
மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!!
நன்றி சிவபாலன்.
மணியன் ஐயா,
தகவலுக்கு மிக்க நன்றிகள்.
சாந்தியின் வெற்றி தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் பெருமை தரும் செய்தி. சாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஐயா, தமிழ்மணப் பதிவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களால் ஆன சிறு தொகையைப் பங்களித்து அவரின் குடும்பத்திற்கு அன்பளிப்புச் செய்தால் என்ன? இதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்கும் என நினைக்கிறேன்.
//சாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்//
சிறப்பான கருத்து.
கிரிகட்டை மட்டும் வணங்கும் நம் மக்களும் மாற வேண்டும்.
வாங்க வெற்றி.
//தமிழ்மணப் பதிவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களால் ஆன சிறு தொகையைப் பங்களித்து அவரின் குடும்பத்திற்கு அன்பளிப்புச் செய்தால் என்ன? //
சிறப்பான கருத்து.சென்னை பதிவர் வட்டம் கவனிக்க வேண்டும். ஆயினும் ஏதாவது ஒரு நிறுவனம் அவரை sponsor செய்தால் நிரந்தர தீர்வாய் அமையும். மேற்கு இரயில்வே அவருக்கு வேலை கொடுத்தபோதிலும் குடும்ப காரணங்களுக்காக அவரால் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
வாங்க லப்டப். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பதியப் போகிறீர்களா ?
நீங்கள் சொல்வதுபோல் கிரிக்கெட் மாயத்தில் மற்ற சாதனைகள் வெளிவருவதில்லை. இந்த ஏசியட்டில் சானியா மிர்ஸாவின் தங்கம் மற்ற வீரர்களை இருட்டடித்து விட்டது.
மறுமொழியிட