போலி(யோ) மருந்து ?
இந்தியாவின் போலியோ ஒழிப்பு திட்டத்தின் தோல்விகளை பத்ரி தன் பதிவில்ஆராய்ந்திருந்தார். சமூக அவநம்பிக்கையினால் உ.பி யில் எவ்வாறு தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். நாடு முழுவதும் உற்சாகமாக மக்கள் கலந்து கொண்ட போலியோ சொட்டுமருந்து திட்டத்தினால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒழிக்கப் பட்டிருக்க உபியும் பிஹாரும் மட்டும் விதிவிலக்காக இருப்பதும் அங்கிருப்பவர்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதால் முழுவதும் ஒழிக்கப் பட்ட மாநிலங்களிலும் போலியோ தலைதூக்குவதும் கவலை அளிக்கிறது.
இந்நிலையில் மும்பையில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது என்று இறுமாந்திருந்த சமயத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒன்பது வயது சிறுமி ஒருவர் பாதிக்கப் பட்டிருப்பது பொதுநல ஊழியர்களுக்கு கவலை உண்டாக்கியுள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட நஸ்லி ஷேக்கிற்கு பரிந்துரைக்கப்பட்ட 12 முறை தடுப்புமருந்து கொடுக்கப் பட்டும் பாதிக்கப் பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
போலியோ தடுப்பு மருந்து தன் ஆற்றலை இழந்து விட்டதா ? அல்லது
நஸ்லிக்கு சரியான முறையில் கொடுக்கப்படவில்லையெனில் திட்டத்தின் இயங்குமுறை சரியில்லையா ?அல்லது கொலைபாதக அலட்சியமா ? கொடுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வெறியில் நிகழ்ந்த கவனமின்மையா ? கடைசியாக நமது திரைப்படங்களில் காண்பிப்பது போல போலி மருந்தா?
அப்பெண் உபி சென்றுவந்த பின்னரே நோய் தொற்றியது; அவர்கள் வசிக்கும் சூழல் சுகாதாரமற்றது என்பன இரண்டாம் பட்சம்தான். தடுப்பு மருந்து கொடுக்கப் பட்ட பெண்ணிற்கு எவ்வாறு போலியோ வந்தது என்பதற்கான ஆதார காரணங்களைக் கண்டறிய வேண்டும். இதன் நடுவில் நஸ்லிக்கு போலியோ இல்லை Accute Flaccid Paralysis என்ற நோய் என திசை திருப்பும் ஒரு செய்தி. அப்படியென்றால் இதனை சரியாக கண்டறிய Diagnostic சோதனை கருவிகளும் முறைகளும் சரியாக இல்லாததும் கவலைக்குறியதுதான்.
இதனால் முழுமையாக ஒழிக்கப்பட்டது என்று எந்த ஒரு மாநிலமும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது நிச்சயமாகிறது. தவிர சொட்டுமருந்து திட்டத்தின் இயங்குமுறையையும் efficacyஐயும் சோதனை செய்து கொள்ளுதல் அவசியமாகும். மலத்தில் உருவாகி நீரினால் பரவும் இக்கிருமியை தடுக்க பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதும் அவசியம். சொட்டுமருந்து மட்டும் போதாது, சுத்தமும் சுகாதாரமும் சுகம்தரும் என்ற செய்தியை பரப்புவதிலும் அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சமூகங்களை குறை காண்பதை விட அரசு இயந்திரங்களின் அணுகுமுறையை பரிசீலித்து போலியோவை இந்தியாவிலிருந்தே ஒழிப்போம். நம் தமிழகத்து அமைச்சர் அன்புமணி காலத்தில் இது நடந்தால் அவருக்கும் நமக்கும் பெருமை.
2 மறுமொழிகள்:
// நஸ்லிக்கு போலியோ இல்லை Accute Flaccid Paralysis என்ற நோய் என திசை திருப்பும் ஒரு செய்தி. அப்படியென்றால் இதனை சரியாக கண்டறிய Diagnostic சோதனை கருவிகளும் முறைகளும் சரியாக இல்லாததும் கவலைக்குறியதுதான்//
Misinformation spreads faster than information என்பார்கள். எது எதற்கோ, கூட்டு விசாரணைக் குழு, அறிக்கைப் போர் எல்லாம் நடக்குது. அதற்கு தரும் முக்கியத்துவத்தை இதற்குத் தரலாம். முதல்வரே தலைமை வகிக்க வேண்டிய விடயம்!
வருமுன் காப்போம் என்பது போய், மீண்டும் வருமுன் காப்போம் என்றாகி விட்டது.
//நம் தமிழக அமைச்சர் அன்புமணி காலத்தில் இது நடந்தால் அவருக்கும் நமக்கும் பெருமை//
மிகவும் உண்மை. Task master என்கிறார்கள் அவரை. அது உண்மை என்று உணர்த்த அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு!
உங்கள் முதல் வருகைக்கு நன்றி கண்ணபிரான் இரவிசங்கர்.
//வருமுன் காப்போம் என்பது போய், மீண்டும் வருமுன் காப்போம் என்றாகி விட்டது.// அப்படியென்றால் கூட பரவாயில்லை, வந்தபின் யாரைக் குறை கூறலாம் என்றிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
மறுமொழியிட