தலைவணங்குதும் கலாசாலையே!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது வருட கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மிகவும் தொன்மை வாய்ந்ததும் பாரம்பர்யமிக்கதுமான இப்பல்கலைக் கழகம் அவருக்கு மட்டுமன்றி எனக்கும் கல்வி யளித்த நிறுவனமாகும். இன்றைய பொறியியல் பலகலைக்கழகங்கள் வருமுன்பு அனைத்து கல்லுரிகளும் (நான் படித்த பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி உட்பட) சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சியிலே அமைந்திருந்தது. முனைவர் ஏ.இலக்ஷ்மணசாமி முதலியார் அவர்கள் கையொப்பமிட்ட பட்ட சான்றிதழ் பெற பேராவல் கொண்டிருந்தேன். (ஆனால் நான் படப் படிப்பு முடித்த சமயத்தில் திரு. நெ.து.சுந்தரவடிவேலு அப்பதவியை அலங்கரித்தார்). ஒவ்வொரு பதவிக்கால முடிவிலும் வேறோரு துணைவேந்தர் நியமிக்கப் படும் இக்கால கட்டத்தில் அவர் 27 வருடங்கள் தொடர்ந்து அப்பதவியை வகித்து வந்தது ஒரு சிறப்பம்சமாகும். ஆற்காட்டு சகோதரர்கள் என அழைக்கப் பட்ட இரட்டையரில் மூத்தவரான ஏ. இராமசாமி முதலியார் திருவிதாங்குர்/கேரள பல்கலைக்கழக துணை வேந்தராக பணிபுரிந்ததும் ஜஸ்டிஸ் கட்சியின் கட்சிப்பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்ததும் இதர விதயங்கள்.

இப்பல்கலையின் நூற்றாண்டு விழா மண்டபத்திலேதான் எனது அரசுப்பணிக்கான UPSC தேர்வுகளை மெரினா காற்றை அனுபவித்தவாறு எழுதியநாட்கள் நினைவுக்கு வருகின்றன. 1857இல் தோற்றுவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் அது மட்டுமே தென்னிந்தியா முழுமைக்கும் இருந்த ஒரே பல்கலைக் கழகமாக நாம் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தது. இதன் முன்னாள் மாணாக்கர் பட்டியலில் முன்னாள் குடியரசு தலைவர்கள் டாக்டர் S.இராதாகிருஷ்ணன், V.V. கிரி, சஞ்சீவ ரெட்டி, R.வெங்கட்ராமன், K.R. நாராயணன் ஆகியோரும் நோபல்பரிசு பெற்ற C.V. இராமன் மற்றும் S. சந்திரசேகர் ஆகியோரும் அடங்குவர்.

இன்றைய விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ஆராய்ச்சிகளின் தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பல்கலைக் கழகமும் அங்கு நடத்தப் பெறும் ஆராய்ச்சிகளின் தரத்தாலேயே அறியப் படும் என்றார். சென்னை,மும்பை மற்றும் கொல்கொத்தா பல்கலைகளின் இணையபல்கலைக் கழக வலைவாயிலை திறந்து வைத்தார்.இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெறமுடியும் என குறிப்பிட்டார். 150 வருடங்களைக் குறிக்க 150 புத்தகங்கள் வெளியிடும் முகமாக தொடக்கநாளன்று 16 புத்தகங்களை வெளியிட்டார். மிகுதி புத்தகங்கள் வருட முழுவதுமான கொண்டாட்டங்களின் அங்கமாக வரும் நாட்களில் வெளிவரும்.

மத்திய அரசிலிருந்து கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்ள மாநில முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். மத்திய கல்வி அமைச்சர் இராஜிவ்காந்தி பெயரில் சமகால ஆய்வுகளுக்கான பிரிவு(Chair) ஏற்படுத்தப் படுமென்றும் மத்திய நிதி அமைச்சர் நவீன nanotechnologyக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் மையம் அமைக்கப் படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திராவிட இயக்க கல்விக்கான மையம் அமைக்கப் படுமென்றும் அறிவித்தனர்.இந்நாளை நினைவுறும் வண்ணம் தபால்தலையும் முதல்நாள் உறையும் வெளியிடப்பட்டன.

3 மறுமொழிகள்:

வெற்றி கூறுகிறார்

நல்ல பல தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

இந்த தடவை போனப்ப செனெட் பில்டிங் புதுபித்து பொழிவுடைந்து இருந்ததை பார்க்கும் பொழுது எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. அதுவும் எனக்கு பட்டமளித்த பல்கலைகழகத்தின் வளாகம் சென்று வந்ததில் மிகப் பெருமையாக இருந்தது!

மணியன் கூறுகிறார்

வெற்றி :மிக்க நன்றி!!

வெளிகண்டநாதர் : கட்டிடங்கள் தான் என்றாலும் அவையும் எப்படி நம்முடன் பிணைந்து விடுகின்றன !தற்காலிக சான்றிதழ் வாங்க பட்ட பாட்டின்போது கடுமையாக விமரிசித்த நான் இன்று காணும்போது இறுமாப்படைகிறேன்.

ஆசிரியர் தினத்தில் Alma Materஐ நினைவு கூர்தலும் தக்க செயலே.