பெருவிழாக் காலம்!

ஆட்டம் போடவோ கூட்டம் போடவோ பாட்டம் தீர்க்கவோ மும்பைக்கு வாருங்கள், இது பெரு விழாக் காலம்!! விடிய விடிய 'கர்பா', 'தாண்டியா ராஸ்' கும்மியாட்டம் போடும் குஜராத்தி மேளாக்கள், உருமி மேளத்துடன் ஆரத்தி சுற்றி கொண்டாடும் பெங்காலிகளின் துர்கா பந்தல்கள், படிகளில் கொலு வைத்து வீட்டிற்கு அழைக்கும் நம்மூர் பெண்கள் இவர்களுடன் தங்கள் புனித இரம்ஜான் விரதநாட்களைக் கொண்டாடும் முஸ்லீம்களின் இஃப்தார் விருந்துகள் என நகரமே கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கிறது. இப்போதுதான் நடந்து முடிந்த கணபதி உற்சவமும் மலையாளிகளின் ஓண கொண்டாட்டங்களும் அவற்றின் தாக்கத்தை இன்னும் விடவில்லை.

மூன்று மாதங்கள் முன்னால் இந்நகரிலா குண்டு வெடித்து 187 பேர் இறந்தனர் என வியக்க வைக்கிறது. பன்முக கலாசாரத்தின் வெளிப்பாடு இனிமையாக இருக்கிறது. "இந்த காக்ரா சோளி எப்படி இருக்கிறது" என்று கர்பாமேளாவிற்கு விரையும் செம்பூர் மாமியையும் அலுவலகம் முடிந்ததும் முகமது அலி ரோடிற்கு விரையும் மலையாள சேட்டனையும் துர்காபந்தலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் சலீம்பாயையும் சாதாரணமாகப் பார்க்கலாம்.

தானேயின் துர்காபந்தலில் இந்த வருடம் உடற்குறையுற்றோருக்கு தனி முகாம்கள் நடத்தப் படுகின்றன. சமூகத்தின் நலிவடைந்தோருக்கு பண உதவியும் அளிக்கப் படுகின்றன. விழாக்களின் உற்சாகம் அனைவரையும் அடைய வேண்டும் என்பதே இவர்கள் கொள்கை. இங்கே ஐஐடி அருகே ஹிரநந்தானி பார்க்கில் கொல்கொத்தாவின் தக்ஷினேஸ்வர் காளி கோவிலை அப்படியே நகல் எடுத்துள்ளார்கள்.

மாலையின் இருள் கவியத்தொடங்கிய உடன் மும்பையின் பள்ளிவாசல்கள் உயிர்த்தெழும். இரம்ஜான் விரதம் இருக்க வேண்டிய மாதம் என்றாலும் மும்பைகாரர்களுக்கு அது இஃப்தார் விருந்துகளின் மாதமாகும். முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் இந்து சகோதர்களை அழைக்க இது ஒரு காரணமாகிறது. தாங்கள் விரதத்தை விருந்தினர்களுடன் முடித்துக் கொள்வது அல்லாவின் அருள் எனக் கருதுவதால் இது ஒரு socialising நிகழ்வாக மாறியுள்ளது.

குஜராத்திகளின் தாண்டியா மேளாக்களில் பல்குனி பதக் நடத்தும் நிகழ்ச்சி சிறப்பானது. இங்கு கும்மியாட்டம் போட ஒரு மாதம் முன்பே தனி வகுப்புகள் ஆரம்பித்து விடும். விடிய விடிய ஆட ஆசை இருந்தாலும் தற்கால காவல்விதிமுறைகள் நள்ளிரவிற்கு முன்பே அதிகாரபூர்வமாக (அனுமதியில்லாமல் காவலரின் தயவில் நீட்டித்துக் கொள்வது வேறு) முடித்துக் கொள்ள வைக்கின்றன.

அரபிக்கடலில் புயல் சின்னம் என்று விழாக்களை பூச்சாண்டி காட்டிய வானிலை கூட இப்போது அமைதியாக விழா மாந்தரைக் கண்டு மயங்கியிருக்கிறது. நவராத்திரி, தசரா, இரம்ஜான் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் விழாக்கால வாழ்த்துக்கள்!!

0 மறுமொழிகள்: