தோஹாவா.. தோக்கா*வா?

உலக வர்த்தக கழகத்தின் (WTO) தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தைகள் 2001இல், உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திற்கு உள்ள தடைகளை நீக்கி உலகெங்கும் திறந்த சந்தை எற்படுத்தும் குறிக்கோளுடன், ஆரம்பிக்கப் பட்டது. வெவ்வேறு உற்பத்தி சக்திகளையும் வாங்குகின்ற சக்திகளையும் கொண்ட வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் விவசாய மற்றும் உற்பத்தி பொருட்களை தங்குதடையின்றி எல்லா நாடுகளிலும் விற்கும் வசதியை எதிர்நோக்கியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அனைத்துநாடுகளின் சார்பாக G20 எனக் குறிப்பிடப்படும் 20 நாடுகள் பங்கேற்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் பிரதம செயலர் பாஸ்கல் லாமி இதிலும் குறைத்து G4 என பிராசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பங்கேற்குமாறு கூட்டங்களை ஏற்படுத்துவார். இதனால் தன் மக்களின் நலனை மட்டுமன்றி வளரும் நாடுகளின் பாதுகாப்பையும் இந்தியாவே எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. கடாரின் தோஹாவில் 2001இல் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டதால் இவை தோஹா பேச்சுவார்த்தைகள் எனப் படுகின்றன. இதை அடுத்து காங்குன் (மெக்சிகோ),ஹாங்காங்(சீனா)வில் 20 நாட்டு மந்திரிகளுடன் பேச்சு நடந்தது. தவிர G4 குழுவுடன் ஜெனிவா, பாரிஸ் நகரங்களில் நடந்து, திரும்பவும் இந்த மாதம் ஜெனிவாவில் நடந்துள்ளது.

இந்த ஆறுவருட பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வுமின்றி தோல்வியடைந்திருக்கின்றன. 'No decision is better than bad decision' என்று இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகிறார். வளரும்நாடுகளை தங்கள் சுங்கவரிகளை நீக்கிக் கொள்ளச் சொல்லும் அமெரிக்கா தன் பங்கில் விவசாயப் பொருட்களுக்கு அது அளித்துவரும் மானியத்தைக் குறைக்க தயாராக இல்லை. இங்குபோல் விவசாயம் அங்கு சிறுவிவசாயிகளிடம் இல்லை. பெரும் தனியார் நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. உயர்தர தயாரிப்பு முறைகளாலும், பிரம்மாண்ட அளவினாலும் தயாரிப்புச் செலவை குறைக்கும் இவர்களுக்கு அரசு மேலும் சலுகைகளை வழங்கி கோதுமை, அரிசி போன்ற பண்ணைப்பொருட்களை உலகில் மிக குறைந்த விலையில் விற்கமுடிகிறது. இந்த மானியத்தைத் தான் குறைக்க அமெரிக்க அரசு முன்வரவில்லை. இந்த விலையில் வளரும் நாடுகள் சந்தையை திறந்துவிட்டால், நம் எல்லோருக்குமே அரிசி ரூ.2இல் கிடைக்கலாம். ஆனால் 67.5 கோடி இந்திய விவசாயிகள் பட்டினிச்சாவு தழுவ வேண்டிவரும். 2007இல் அமெரிக்கஅதிபரின் உடனடிமுடிவு (fast track) அதிகாரம் முடிவதால் இந்த வருடக்கடைசிக்குள் ஒரு தீர்மானத்திற்கு வர அனைவரும் முயன்றனர். இருப்பினும் அமெரிக்க விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களின் லாபி, செனட்டர்களின் தேர்தலுக்குப் பணம் கொடுப்பதால், தங்கள் சுயநலத்திற்காக தடுக்கிறது. 'நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், ஊதிஊதி திங்கலாம்' என்பதாகவே இதுவரை இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன.

'ஆகா,நமது பொருட்களை உலகெங்கும் விற்கலாம், வேலைவாய்ப்பு பெருகும், தனிநபர் வருமானம் உயரும்' என இந்த பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்திருந்த ஏழைநாடுகள் பணக்காரநாடுகளின் பிடிவாதத்தால் ஏமாந்தது மட்டுமன்றி உலக வர்த்தககழகத்தின் அவசியம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

*தோக்கா(இந்தி) = பின்குத்து,துரோகம்
மேல்விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Doha_round


2 மறுமொழிகள்:

Sivabalan கூறுகிறார்

மணியன் சார்,

அருமையான பதிவு.

நிச்சயம் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்ப்டவேண்டும். இந்த விசயத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு அடிபனியக் கூடாது.

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவபாலன்.