Bloggers in a spot ?
தமிழ்மணம் வீசும் அழகான வலைப்பூக்களை கண்டு மகிழ கடந்த சிலநாட்களாக படும் சிரமம் சொல்லி முடியாது. அன்னியலோகமும் அடுத்தநாட்டு பிராக்ஸியும் கை கொடுக்கின்றன. அரசின் கணினி கைநாட்டுத்தனம் (காப்புரிமை:துளசிதளம்) நன்றாக வெளிப்பட்டுள்ளது. ஏதோ புத்தகத்தையும், திரைப்படத்தையும் தடை செய்வதுபோல் செயல்பட்டுள்ளனர். இணையசேவை வழங்குவோரும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி யாதொரு பிரக்ஞையுமின்றி (அவர்களை எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் தானே) 'ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்' கணக்காக அரசாணையை நிறைவேற்றியுள்ளனர்.பொதுமக்கள் (எல்லாம் நாம தான்!) கூக்குரலிற்குப் பிறகு அரசு விழித்துக்கொண்டு "நான் சில வலைப்பூக்களைத் தானே தடை செய்யச் சொன்னேன்,ஏன் எல்லாவற்றையும் நிறுத்தினீர்கள்?" என திருப்பிக் கேட்க ISPs அசடுவழிய இப்போது IP Blockingகிற்கு பதிலாக DNS வழி தடைகள் ஏற்படுத்தப் போகிறார்கள். என்ன தடை போட்டாலும் மாறிவரும் நுட்ப உலகில் அது வீணே என்று எப்போது அரசு உணருமோ ? உண்மையிலேயே தணிக்கை செய்யவெண்டுமெனில் சீனா போன்று நாடுதழுவிய நெருப்புச்சுவர் (Firewall) எழுப்பவேண்டும்; மக்களாட்சியும் பேச்சு சுதந்திரமும் நமது USPஆக விளம்பரம் செய்யும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.
இனி தடை செய்யப்பட்ட தளங்களை நோக்கினால் அவை நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியனவாய் தெரியவில்லை. இருந்தபோதிலும் உள்நாட்டு அமைதியை பராமரிக்கும் அரசின் உரிமையை, உடனடியாக செயல்படுத்தவேண்டிய அவசியங்களை மறுக்கவில்லை. ஆனால் தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு அவை ஏன் தடை செய்யப்பட்டன என்று அறிவித்தலும் அவர்கள் தரப்பின் நியாயங்களை சொல்ல வாய்ப்பளித்தலும் ஒரு திறந்த குமுகாயத்தில் அவசியம். ஒரு நீதிமன்ற அதிகாரமுடைய அமைப்பு இத்தகைய அரசாணைகளை, தடைவிதிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட காலவரைக்குள் இருதரப்பினரையும் விசாரித்து, உறுதி (endorse) செய்ய வேண்டும். கைதான யாரையும் குறிப்பிட்ட நேரக்கெடுவிற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது போல் இதுவும் நடக்க வேண்டும். இல்லையேல் ஆளும்கட்சிக்கும் கூட்டணிக்கட்சிக்கும் எதிராக எழுதுவது நாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் செயலாகக் காட்டப்படும்.
இந்தியவலைப்பதிவர்கள் தங்கள் இணையசேவை வழங்குவோரிடம் சேவைகுறைவு குறித்து வாடிக்கையாளர் மன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒருவரது வலைத்தளத்தை அரசு தடை செய்யாதிருக்கும்போது அதனை தடுத்தது சேவைகுறைவே யன்றோ ?
0 மறுமொழிகள்:
மறுமொழியிட