மாண்புக்கு ஒரு அறைகூவல்!

நமது முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு. ஜஸ்வந்த் சிங் அவரது பாரதீய ஜனதா கட்சியிலேயே சிறிது வித்தியாசமானவர். மற்றவர்கள் இந்திய பாரம்பர்ய நடைஉடைகளில் வலம் வரும்போது மேற்கத்திய கலாசாரத்தை தழுவியவர். ஒரு ஆங்கில கனவான் போன்ற பிம்பத்தை உருவாக்கி கொண்டவர். அந்த பிம்பம் கடந்த ஒருவாரத்தில் உடைந்து கொண்டிருக்கிறது. நாட்டின் உயர்பதவிகளில் இருந்த ஒருவருக்குறிய மாட்சிமை மங்கி வருகிறது. இவர்'A Call to Honour' கூப்பிட தகுதி உள்ளவரா என கேள்விகள் எழுகின்றன.

நரசிம்மராவ் காலத்தில் இந்தியபிரதமரின் அலுவலகத்தில் இருந்த அமெரிக்க உளவாளியை தெரியும் என அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது அதன் விற்பனையை அதிகரிக்க செய்த தரங்கெட்ட செயல் என்பது விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஆளைத் தெரியும் என்றவர் இன்று இது ஊடகங்களின் புனைவு என்பது வரை நாளும் வார்த்தை மாறுகிறார். பத்து வருடங்கள் அறிந்த உண்மையை, நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் உண்மையை, தான் அதிகாரத்தில் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தின் பெருமைக்கு சிறுமை நேருமே என வாளாயிருந்துவிட்டு தான் புத்தகம் எழுதும்போது ஆற அமர மீள்நினைவு செய்பவரை என்னவென்று சொல்ல? அதிலும் இவர் இந்திய இராணுவத்தின் பணியிலிருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தவர். என்னே நாட்டுப்பற்று!

அவரது காந்தஹார் அனுபவங்களை வேறு பெருமையடித்துக் கொள்கிறார். நமது மானத்தை விமானத்தில் ஏற்றி தீவிரவாதிகளை பாதுகாப்பாக கூட்டிச் சென்று தீவிரவாதத்திற்கு மண்டியிட்டதை வெட்கப்படாமல் சாம்பெய்ன் அருந்தி கொண்டாடினோம் என்று பெருமை. இதில் மகன் தன்னை பிணைக்கைதியாக வைத்து மற்றவர்களை மீட்க தயாராக இருந்ததாக ஒரு பில்டப் வேறு.

வெளித்தோற்றங்கள் எவ்வளவு தவறான மதிப்புகளை உருவாக்கிவிடுகின்றன ? உருவு கண்டு எள்ளாமை மட்டுமல்ல, மயங்காமையும் வேண்டும்.

இது பற்றிய விக்னேஷின் இடுகை இங்கே.

6 மறுமொழிகள்:

நன்மனம் கூறுகிறார்

திரு. ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு மூக்கு கொஞ்சம் பெரிசு தான், அதான் அனாவசியமா நுழைத்து இப்படி உடை பட்டு கொண்டிருக்கிறார்.

பாப்போம், நெசமாவே எதாவது தகவல் வெச்சிருக்காரானு.

Sivabalan கூறுகிறார்

//என்னே நாட்டுப்பற்று //

ஆம்.. அவருக்கு இப்போதைய தேவை புத்தக விற்பனை... பார்க்கலாம் BJP இதற்கு எவ்வாறு React செய்கிறார்கள் என...

மிகவும் தேவையான பதிவு.

மணியன் கூறுகிறார்

நன்றி நன்மனம் மற்றும் சிவபாலன்.

(துபாய்) ராஜா கூறுகிறார்

// "வெளித்தோற்றங்கள் எவ்வளவு தவறான மதிப்புகளை உருவாக்கிவிடுகின்றன ? உருவு கண்டு எள்ளாமை மட்டுமல்ல, மயங்காமையும் வேண்டும்." //

உண்மையான் வரிகள் மணியன் சார்.

Vignesh கூறுகிறார்

// உருவு கண்டு எள்ளாமை மட்டுமல்ல, மயங்காமையும் வேண்டும்.

உண்மையில் இன்னும் கூட என்னால் புத்தகத்தின் விற்பனைக்காக ஜஸ்வந்த் சிங் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பார் என நம்ப இயலவில்லை. திரைமறைவு ரகசியங்கள் ஏதேனும் இருக்கும் என நிச்சயமாய் தோன்றுகிறது ..

அது சரி புத்தகத்தை படித்து விட்டீர்களா??

--Vignesh

தண்டோரா

மணியன் கூறுகிறார்

(துபாய்) ராஜா - நன்றி. ஊர் திரும்பியாகிவிட்டதா ?

விக்னேஷ்: நானும் அவ்வாறே நம்புகிறேன். உள்ளூர் அரசியலும் வல்லரசின் அரசியலும் உண்மைகளை மறைக்கின்றன.
புத்தகத்தின் பகுதிகளைத்தான் (Excerpts) படித்தேன். இதுவரை அரசியல் புத்தகங்களை வாங்கி படித்ததில்லை. வாடகை நூலகத்திற்கு இன்னும் வரவில்லை.