நேற்று இல்லாத மாற்றம் என்னது ? சிலநாட்களாகவே நான் நானாக இல்லை. குள்ளமணி என்று கேலிபேசி முதல் பெஞ்சில் உட்காரச் சொன்ன என்னை இன்று மிஸ் கூப்பிட்டு பின்னால் இருப்பவர்களுக்கு மறைக்கிறதாம் எனச் சொல்லி இரண்டு பெஞ்ச் தள்ளி உட்கார வைத்த போது நான் மட்டும் தான் காம்ப்ளான் சாப்பிடுகிறேனா என நினைத்தேன். பக்கத்து வீட்டு சேகர் "டேய், உனக்கு மீசை வந்திருக்குடா" எனச் சுட்டிக்காட்டியபோது மீசை முளைக்காத பயல்களைப் பார்த்து ஒரு அலட்சிய பார்வை வீச பெருமையாயிருந்தது. அரும்பு மீசை வைத்துக் கொள்வது சிவாஜி போலவா அல்லது எஸ் எஸ் ஆர் போலவா எனக் குழம்பியபோது "மபொசி மீசை வைத்துக் கொள், அப்போதுதான் ஐஸ்கிரீமிற்கு என்னுடன் போட்டி போட மாட்டாய்" என என் தங்கை கிண்டலடித்த போது எனக்கு ஏன் கோபம் வருகிறது ?
அன்று கூட காலையில் தொலைபேசி அடிக்கிறதே என எடுத்து"ஹலோ" என்றவுடனேயே மறுமுனையிலிருந்து " சார், நான் இன்றைக்கு ஆபிஸிற்கு வரமுடியவில்லை... " என ஆரம்பித்தவரிடம் " சார், சார், நான் _________ரின் பையன் பேசுகிறேன். அப்பா, வாக்கிங் போயிருக்கார், வந்தவுடன் பேசச் சொல்கிறேன், நம்பர் கொடுங்க சார்.. " என்றவுடன், " அடடா, உன் குரல் அவருடையது போலவே இருக்கிறதே " என்றார். நேற்றுவரை "என்னப்பா, குழந்தை" என்றவருக்கு இன்று என்குரல் அப்பாவினுடையதைப் போல எப்படி மாறியது? இந்த ஆச்சரியத்தை அன்று மாலையே போனில் பள்ளியிலிருந்து அப்பா பேசுவதைப் போல பேசி அம்மாவை ஏமாற்றி, இரவில் எல்லோருடனும் பகிர்ந்து சிரித்ததை நினைத்தால் உள்ளூர பயமாக இருக்கிறது. தங்கை எப்போதும் பழகிவரும் தோழர்களைப் பார்த்தால் இப்போது ஏன் வில்லன்களாகத் தெரிகிறார்கள் ? அவள் லேட்டாக வந்தால் அப்பாகூட கோவித்துக் கொள்ளாதபோது எனக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது ? அட, வாசலில் காய்கறிக்கடைகாரன் கூட அம்மாவை ஏதாவது இளக்காரமாக சொன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லையே. சாது, சாது என்று பெயர் வாங்கிய நானா இப்படி சண்டைக்கு நிற்கிறேன் ? என்னாச்சு எனக்கு ? ஒல்லிப்பிச்சான் உடம்பில் சதை கூட போட ஆரம்பித்திருக்கிறதே. அந்த மாருதி ஜிம் அண்ணாக்களைப் போல உடம்பை ஷேப் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் 'அப்பா' மாதிரி ஆகப் போகிறேனா ?
ஆனால் அப்பா எவ்வளவு நல்லவர் ? கடவுள் பக்தியுடன் ஒழுக்க சீலர். நான் அவர் மாதிரி இல்லை. நேற்று பார்த்த ஜெயமாலினி டான்ஸ், கனவிலும் வந்து அவள் எனக்கு முத்தமெல்லாம் கொடுத்தாளே, சீச்சீ, நான் ரொம்பக் கெட்ட பையன். கடவுளே, எனக்கு இந்த கெட்ட புத்தியை மாத்திக் கொடு, நான் நல்ல 'அப்பா'வாக இருக்க வேண்டும். இராத்திரி வேட்டியெல்லாம் கறையாகி விடுகிறதே, அம்மா கவனித்திருப்பாளோ, தினமும் வேட்டியைத் துவைக்கப் போடச் சொல்கிறாளே தெரிந்திருக்குமோ ? அவமானமாக இருக்கிறதே. பக்கத்து வீட்டு வசந்தா எவ்வளவு குண்டு, கறுப்பு.. எத்தனையெல்லாம் அவளை கலாட்டா செய்திருக்கிறேன். அவளே தேவிகா போலத் தெரிகிறாளே. போனமாதம்வரை அவளிடம் நோட்ஸ் கேட்டு வாங்கியவன் இன்று அவளுடன் பேச ஏன் தயக்கமாக இருக்கிறது ? அவள் அழகாயிருக்கிறாளே என நான் நினைத்தது அவளுக்குத் தெரிந்துவிடும் என்றா ?
இந்த அப்பா, ஆனாலும் ரொம்ப நல்ல அப்பாவாக இருக்காரே. என்னாலெல்லாம் அப்படி இருக்க முடியாது. எஸ் எஸ் எல்சி பாஸ் செய்ததிற்கு பசங்க கூட திருட்டு 'தம்'அடித்தோமே,அதெல்லாம் இல்லாமல் அப்பா லைப் வேஸ்ட். இந்த கோவிந்தனுக்கெல்லாம் பாக்கெட்மணி கிடைக்கிறது; நமக்கு வீட்டிற்கு வாங்குவதில் அடிக்கும் கமிஷன்தான்.இதெல்லாம் திருட்டு கிடையாது; வேலைக்குக் கூலி, கொடுக்கலைன்னா நாம எடுத்துக்க வேண்டுயதுதான்.முதலில் கோவிந்தன் கேர்ள்ஸ்க்கு ஐஸ்க்ரீம் பார்லரில் ட்ரீட் கொடுக்கும்போது பொறாமையாக இருக்கும். இப்போது அவனுடன் கூட்டு சேர்ந்தாச்சு. முதல்ராங்க் வாங்கும் மயில்சாமியும் என் ஃப்ரெண்ட்தான், ஆனால் அவனும் என்னை மாதிரி ஒன்னுமில்லாதவனாச்சே, என்ன பிரயோசனம் ?
அப்பாதான் மார்க்கெல்லாம் கம்மியாகிறதேடா என்று கவலைப் படுகிறார். மார்க்கெல்லாம் யாருக்கு வேணும், முக்கியமான ஆட்களைத் தெரிந்திருந்தால் போதும். இவருக்கு முடியாது, பின்னே, இவ்வளவு 'நல்லவராக' இருந்தால் ? ஆனால் எனக்கும் இது ஆச்சரியம் தான். நன்றாகத்தானே படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாள் சுலபமாக இருந்த பாடங்கள் ஏன் போர் அடிக்கின்றன ? மறந்து போகிறதே ? ஒருவேளை உடற்பயிற்சி செய்து உடல் வளர்த்தால் மூளை குறையுமோ ? அப்படியெல்லாம் ஆகாமல் மீனாட்சிதான் காப்பாத்தவேண்டும். ஆமாம், நான் 'அப்பா'வாகிக் கொண்டிருக்கிறேன். நானும் நல்ல 'அப்பா' ஆக வேண்டும்.