மறக்கடிக்கப்பட்ட மனிதர்கள்


நேற்றைய தினம் நாராயணின் உருப்படாதது - பதிவில் "கொத்துபரோட்டா -கொஞ்சம் காரமாய்" மும்பையின் சேரிகள் பற்றி எழுதியிருந்தார்.ஐபிஎன் லைவ் சர்வே ஒன்றினை ஆதாரமாக வைத்து 70% பேர் சேரிகளை தூரப் படுத்தவேண்டும் என்று சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் அந்நிகழ்ச்சியை பார்க்காததால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எத்தரப்பு மக்கள் பேட்டி காணப் பட்டார்கள் எனத் தெரியவில்லை. ஆயினும் மும்பையின் ஜீவநாடியாக சேரிமக்கள் விளங்குகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக சேரிகளில் வாழ்வதாக சென்சஸ் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.நடைமுறை வாழ்வில் யாரும் அவர்களை தீண்டத் தகாதவர்களாக பார்ப்பதாகத் தெரியவில்லை. கட்டிட வளர்ப்பு முதலாளிகள் (Property Developers), அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க செய்யும் Media lobbyஆக இருக்கலாம். போனவருட வெள்ளத்திற்கு பிறகு, மித்தி நதியின் (மும்பையின் கூவம்) போக்கை அடைத்தவாறிருந்த சேரிகள்/ பணிமனைகள் மீது ஒரு வெறுப்பு வந்தது உண்மை. ஆனாலும் அதன் முழுத்தாக்கம் மும்பை நகராட்சி மீதும் பிற வளர்ச்சி குழுமங்கள் மீதும் தான் அதிகம்.

சிங்காரச் சென்னை திட்டம்போல மும்பைகாரர்களுக்கு ஷாங்கையை போன்ற மும்பை என்ற கானல்நீர் காட்டப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக மும்பை சேரிகளை ஒழித்து அனைவருக்கும் இருப்பிடம், சுகாதாரமான கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியன ஏற்படுத்த ரூ40,000 கோடி செலவில் திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. அந்த பின்னணியிலேயே ஒருவேளை சேரிகள் ஒழிக்கப் படவேண்டும் என்று சர்வேயில் சொல்லியிருக்கலாம்.

எல்லா பெருநகரங்களிலும் சேரிகள் வளர்வது இயல்பானாலும், மும்பையின் சேரிகள் நடுத்தர, படித்த மக்கள் நிறைந்த சேரிகளாகும். குடியிருப்புகளின் தேவைக்கும் இருப்புக்கும் உள்ள இடைவெளி சேரிகளை உருவாக்குகின்றன. இன்றைய நாளேட்டின்படி அந்தேரியில் ஒரு சேரியில் வசிக்கும் இராஜாராம் இலஜ்ரேகர் ஒரு பெரிய கம்பெனியின் ஆடிட்டராக வெளியூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.அவரது மகன் கான்வென்ட்டில் படிக்கிறார். அவர் போன்றவர்களால் ரூ.7000/- வாடகை கொடுத்துக் கொண்டு 1BHK குடியிருப்பில் இருக்க முடிவதில்லை. மாறாக வெகுதொலைவில் புறநகர் பகுதியில் தங்கிக் கொண்டு வண்டிச்சத்தம் கொடுத்து மாளவில்லை. அதனால் சேரி வாழ்வே மேலென வாழ்கிறார். தவிரவும் இங்கெல்லாம் சேரிகள் நமது ஊர் குடிசைகள் போலல்லாமல் தகரகீற்றுகளினால் இரண்டடுக்குகளாக அமைக்கப் படுவதால் மேலே படுக்கையறை தனியாக உள்ளது. நமது சென்னையைப் போலவே தார்தியோ (Tardeo)வில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டு அடுக்குமாடிக்கட்டிடங்களில் இலவச குடியிருப்புக்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் ஓரிரு வருடங்களிலேயே அவற்றை ரூ10 இலட்சத்திற்கு விற்றுவிட்டு சேரிகளுக்கு மீண்டு வந்தவர் அநேகம்.சேரிகளில் வாழ்வதற்கு பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றை முழுதும் புரிந்து கொள்ளாமல் சேரியிலேயே வாழ்ந்திராதவர்கள் அவர்களுக்கு முடிவுகள் காணும் போது இத்தகைய aberrations ஏற்படுகின்றன.


மும்பையில் தாராவி சேரிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். முக்கியமாக நாயகன் படத்திற்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்ல அறிமுகமானது. தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக மும்பை வந்த பெரும்பாலோர் இங்குதான் குடியேறியுள்ளனர். இங்கு தோல்பொருட்கள் தயாரிக்கும் பட்டறைகள் அதிகம். இந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாகும். தாராவி சீரமைப்பு என்று சொல்லி இங்கிருப்பவர்களை அடுக்குமாடிகட்டிடங்களில் இடம்பெயர்த்துவிட்டு மும்பையின் கட்டிடவளர்பாளர்களுடன் கூட்டுலாபம் காண ஆளும்கட்சி முயல்வதாக அரசியலும் உண்டு.

அவரது பதிவிலே என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. ( அவரது முகப்புப் பக்கத்தில் முழு இடுகையையும் படிக்க முடிந்த எனக்கு, மறுமொழிகளை கிளிக்கினால் பாதி பக்கமே ஏற்றப் படுகிறது, மறுமொழி சுட்டியை அணுக முடியவில்லை. )


7 மறுமொழிகள்:

Ram.K கூறுகிறார்

தாராவி என்ற ஒன்றை நான் நாயகன் படம் மூலமாக அறிந்துகொண்டேன்.

அவலமான வாழ்வு.

மணியன் கூறுகிறார்

நன்றி ராம்பிரசாத்,
தாராவி ஒரு தனி உலகம். அவர்களின் வாழ்வை வைத்து பல படங்களும் குறும்படங்களும் படைக்கப் பட்டுள்ளன. ஆனால் அவர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.ஆரம்பத்தில் சிவசேனையின் பாதிப்பால் தென்னிந்திய குடிபெயர்ந்த உழைப்பாளர்கள் என்று மாநகராட்சியும் புறக்கணித்தது. இப்போது ஓட்டுவங்கி அரசியலில் சற்று பரவாயில்லை.

குமரன் (Kumaran) கூறுகிறார்

அன்பு நண்பரே.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

மதுமிதா கூறுகிறார்

நன்றி மணியன்
சேரி குறித்த பதிவிற்கு
இன்னும் இந்த மக்கள் குறித்து அதிகமாய் தெரிவிக்கணும்.வாழ்வதற்காக எதனுடனும் சமரசம்செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பாவம்.

மணியன் கூறுகிறார்

அன்பு குமரன், அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று அலுவகத்திலும் சரி வீட்டிலும் சரி தமிழ்மணம் பக்கம் வர முடியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் எல்லாம் முடிந்துவிட்டது.
எனது வாக்கு எப்போதுமே உங்களுக்குத் தான்.

வருகைக்கு நன்றி,மதுமிதா.

Narain கூறுகிறார்

நன்றிகள் மணியன், தகவலுக்கு. நீங்கள், www.ibnlive.com சென்றீர்களேயானால், அதைப் பற்றிய தகவல்களும், வீடியோவும் கிடைக்குமென்று நம்புகிறேன்.

மணியன் கூறுகிறார்

நன்றி நாராயணன், நிச்சயம் நீங்கள் சுட்டும் தளத்தைப் பார்க்கிறேன்.