மதுரையில் லார்ரி பேஜ் !
சென்ற ஞாயிறன்று கூகிள் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான 33 வயது லார்ரி பேஜ் ( Larry Page) கோவில்நகரான மதுரைக்கு அங்குள்ள பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். உலக அளவில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் இந்த மருத்துவமனையைப் பற்றி மேலாண்மைவியல் குரு எனக் கருதப்படுகின்ற சி.கே.பிரகலாத்தின் கட்டுரையால் கவரப்பட்டு வந்த பேஜ் அங்குள்ள assemblyline approachஇனால் ஒவ்வொருவருடமும் 2.75 இலக்ஷம் கண் அறுவை சிகிட்சைகள் நடைபெறுவதை கேட்டு ஆச்சரியமடைந்தார். ரூ.700க்கு நடத்தப்படும் காடராக்ட் அறுவைகள் மிகக் குறைந்த செலவாகும். இத்தனை குறைந்த செலவில் சிகிட்சைகள் செய்தும் பொருளாதார அளவில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிக மேலாண்மை பல்கலைகளில் பாடமாக படிக்கப் படுகின்றன.
பாண்டிச்சேரி அரவிந்தரின் நினைவில் 1976இல் டாக்டர். வெங்கடசாமியினால் மதுரையில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று தேனி, கோவை, திருநெல்வேலி மற்றும் பாண்டிச்சேரியில் கிளைகளை நிறுவி விழியற்றோருக்கு வழிகாட்டி வருகிறது.தவிர கண் சம்பந்தமான ஆராய்ச்சிகள், உலகளாவிய பயிற்சித்திட்டங்கள், கண்ணிற்கு வேண்டிய கண்ணாடிகள் தயாரித்தல் என இத்துறையில் முத்திரை பதித்து வருகிறது.
தனது தனி விமானத்தில் வந்த லாரி பேஜ் கூகிளின் சேவைகளை முழுவதும் அரவிந்தின் சமூகசேவைகளுக்கு அர்ப்பணித்தார். தனது பொறியாளர்கள் அரவிந்தின் வலைத்தளத்தை மேம்படுத்துவதிலும் உதவுவார்கள் என்றும் விளம்பரங்கள் இலவசமாக கூகிள்தளங்களில் வழங்கப் படும் என்றும் ஆதரவு தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ் வந்ததிற்கு எதிர்மாறாக இருக்கிறது கூகிள் நிறுவனரின் தமிழக விஜயம் !
நன்றி: DNA Money