மூடுமந்திரம் ?
ஹாரி பாட்டர் இறந்து விடுவானா? இன்றைய இணையத்தின் தலையாய பிரச்சினை இதுதான். ஜே.கே ரோலிங் சிறுவர்களுக்கான தனது மந்திரஜாலக் கதைகளின் தொடரில் கடைசி புத்தகத்தை எழுதவிருக்கிறார். ஆங்கிலேயரான இவரது நாவல்கள் உலகெங்கும் 300 மிலியன் பிரதிகளுக்கு மேல் விற்றிருகின்றன. தனக்குப் பிறகு இந்த தொடரினை வேறு யாரும் தொடரக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஏழாவது பாகத்தில் இத்தொடர் நாவல்களின் நாயகனான ஹாரிபாட்டர் என்ற சிறுவனை இறக்கடிப்பாரோ என்ற ஐயத்தில் ஹாரியின் விசிறிகள் தூக்கத்தை இழந்து வருகிறார்கள். ரோலிங்கின் பயத்தில் அர்த்தமில்லாமல் இல்லை; நமது கல்கியின் பொன்னியின் செல்வனுக்கே அந்த கதாபாத்திரங்களை வைத்து அடுத்த நாவல்கள் வரவில்லையா? இயான் ஃப்ளெமிங் இறந்தபிறகும் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் வருகின்றனவே.
தனது ஆறாவது நாவலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை சாகடித்த ரோலிங் மீது வலையுலக மக்கள் நம்பிக்கை வைக்காமல் அவரது ஒவ்வொரு சொல்லையும் கவனித்து வருகிறார்கள். அவரும் தன் கடைசி நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் இறப்பதாகவும் ஒருவர் மரணத்தின் வாயிலிலிருந்து தப்பிப்பதாகவும் சொல்லி பதற்றமேற்படுத்துகிறார். அமெரிக்காவில் நடந்த சமீப புத்தகம் 'படிக்கும்' நிகழ்ச்சியில் பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் ஸ்டீபன் கிங் மற்றும் ஜான் இர்விங் பல்லாயிரக் கணக்கான உலக மக்கள் சார்பாக 'எங்கள் ஹாரியை சாகடிக்காதீர்கள்' என கோரிக்கை விட்டனர். வாசகர்கள் எழுத்தாளரின் முடிவை மாற்றுவது புதிதல்ல.கானன் டாயில் தனது ஷெர்லாக் ஹோம்ஸ்ஸை ரீகன்பாக் அருவியில் விழுந்ததாகக் கூறி முற்றுப்புள்ளி வைக்க எண்ணியதை வாசகர்கள் எதிர்த்து அடுத்த கதை எழுத வைத்து அவர் பிழைத்ததற்கு காரணம் கண்டுபிடிக்க வைத்தனர். இணையத்தின் முழுவீச்சையும் பயன்படுத்தி ரோலிங்கிடமிருந்து ஹாரியைக் காப்பாற்ற இரசிகர்கள் வியூகம் அமைத்து கொண்டுள்ளனர். அதிலும் வில்லன் வொல்டொமார்ட் இறக்காமல் ஹாரிக்கு முடிவெய்தினால் தர்மத்தை சூது வென்றதாகிவிடும் என்று 'சாட்டு'கின்றனர். சிலர் அவன் ஹெர்மியொனைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்வின் முடிவிற்கு சமானம் என்று நகையாடுகின்றனர்.
ஒரு புத்தகம் வெளிவராமலே இத்தனை ஆர்வத்தை கிளர முடிகிறதென்றால் ஹாரியின் தாக்கத்தை உணர முடிகிறது.