முப்பெருவிழா!!

தமிழ்மண அன்பர்கள் எல்லோருக்கும் விய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நம்முடன் வங்காள, பஞ்சாபி நண்பர்களும் புதுவருடம் கொண்டாடுகின்றனர். அங்கு இது வைகாசி மாதம் (பைசாகி) என்று கொண்டாடப்படுகிறது. மலையாள புதுவருடமும் இன்றே. இன்றையதினம் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நகரும் நாளாகும். ஆகையால் கேரளத்தில் இம்மாதம் மேடம் என்று வழங்கப் படுகிறது.இந்நாள் விஷு என்று கொண்டாடப் படுகிறது.

விஷு கேரளத்தின் முக்கிய விழாக்களில் ஒன்று. இன்றைய தினம் கனி காணுதல் என்பது சிறப்பான ஒரு நிகழ்வு. புதுவருடத்தின் முதல்நாளே இந்த கனி கொலு அமைக்கப்படும். தேங்காய், கொன்னைப்பூ, முக்கனிகள், தானியங்கள் மற்றும் செழுமையை குறிக்க நகைகளும் பணமும் அழகுற வைக்கப்படும். ஒரு கடவுள் (பெரும்பாலும் குருவாயூர் கிருஷ்ணர்)படமும் ,( அல்லது பூசை அறையிலேயே அமைத்து) கண்ணாடியும் வைத்து, திருச்சூர் விளக்குகளை வைத்து பூர்த்தி செய்வர். காலையில் எழுந்து கண்களை மூடிக்கொண்டு நேராக கனி காணுதல் அந்த ஆண்டு முழுவதும் வளமையை கொடுக்கும் என்று நம்பிக்கை.நாங்கள் காங்கேயத்துக் காரர்கள் என்றாலும், பக்கத்து பாலக்காட்டு வழக்கம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது. கேரளாவின் குருவாயூர், ஆலப்புழை அருகே அம்பலபுழா( ஓ..அந்தப் பாயசம்) மற்றும் சபரிமலை கோவில்களில் கனி காணுதல் விசேஷம்.

நன்றி:http://pramod.ch/

இன்றையதினம் புனித வெள்ளியுமாகும் . இயேசு மரணத்தை வென்ற நாள். வரலாறுபடி, இயேசு உயிர்த்தெழுந்தது யூதர்களின் feast of Passover எனப்படும் விருந்து தினத்தன்றாகும். ஆரம்பகாலங்களில், யூத கிருத்தவர்கள் இரண்டையும் ஒன்றாக அவர்களின் நிசான் மாதத்தில் 14ஆம் நாள் கொண்டாடினார்கள். இது ஏப்ரல்மாதத்தில் வரும். மற்ற கிருத்துவர்கள் நிசான் மாதம் 14ஆம் நாளையொட்டிவரும் ஞாயிறு கொண்டாடினர். இந்த வேற்றுமையை நீக்க கி.பி.325 இல் ஈஸ்டர் கொண்டாடும் நாள் தீர்மானிக்கப் பட்டது. அதன்படி, சமைரவுநாளான மார்ச் 21க்குப் பிறகு வரும் முழுமதிநாளுக்கு அடுத்துவரும் ஞாயிறு உயித்தெழுந்த நாளாகும்.இதனால் ஈஸ்டர் மார்ச் 22 இலிருந்து ஏப்ரல் 25 க்குள் ஒருநாள் வரும். நான் எர்ணாகுளத்தில் பணிபுரிந்தவரை கல்லூர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ஒவ்வொரு செவ்வாயும் செல்வதுண்டு. அங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தருணங்கள் நினைவிலாடுகின்றன.


இந்த வாரத்தில் வரலாற்று நாயகர்களான நபிகள் நாயகம் மற்றும் மகாவீரர் பிறந்ததினங்களை சென்ற செவ்வாயன்று கொண்டாடினோம். இன்று இந்திய சமுகாயத்திலே பெரும் மாற்றங்களுக்கு வழிகாட்டிய அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் பிறந்ததினம் ஆகும். அவரது எண்ணங்களை இன்று நினைவு கூர்ந்து சமூகநீதி காணும் நாள்.

இத்தகைய சிறப்புநாளன்று அன்பர்களுக்கு வரும் நாட்கள் , வேண்டிய வரம் தரும் நாட்களாக அமைய இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்றே சங்கே முழங்கு" --- பாவேந்தர்

0 மறுமொழிகள்: