காவ்யாவின் காப்பி ?
சென்னையில் பிறந்த 17 வயது காவ்யாவிஸ்வநாதன் $500,000 க்கு முதல்நாவல் எழுதி பெயர் பெற்றது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. ஆனால் அவரது ஆக்கம் மற்றவரின் 'இன்ஸ்பிரேஷனா' என்று இன்று வருத்தமாயுள்ளது.
காவ்யாவின் பெற்றோர் மேரி சுந்தரம், விஸ்வநாதன் இராஜாராமன் இருவருமே மருத்துவர்கள். ஆரம்பகல்வி பிரிட்டனில் கழித்தாலும் அமெரிக்காவிலேயே வளர்ந்தவர். சிறுவயது முதலே ஹார்வர்டில் படிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டு முயற்சி செய்து சாதித்தவர். அவர் வந்த வழியை கதைக் களமாக்கி ஓபல் மேத்தா என்ற இளம்பெண் அவரது பெற்றோரின் ஒருமுக சிந்தனையாலும் செயல்களாலும் எவ்வாறு ஹார்வர்டில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்று "How Opal Mehta Got Kissed, Got Wild and Got a Life”நாவலை எழுதியுள்ளார். லிட்டில் ,ப்ரௌன் பதிப்பகத்தார் இந்தக் கதையின் முதல் நான்கு அத்தியாயங்களையும் கதைக்கருவினையும் கேட்டு, காதலிக்க நேரமில்லை நாகேஷ் ஸ்டைலில் "இந்தா பிடி, அட்வான்ஸ் $500,000, உன் இரண்டு நாவல்களுக்கு" பதிவு செய்து கொண்டனர். 17 வயதில் இத்தனை சாதனையா என்று உலகே வியக்க ஹார்வர்ட் பள்ளியிலும் சேர்ந்தார். ( அங்கே பள்ளி இங்கே பல்கலை) தனது முதலாண்டில் பட்டப்படிப்பின் பளுவுடனே இந்த நாவலை எழுதி முடித்து இந்த மாத முதல்வாரத்தில் வெளியிட்டார்.
வெளிவந்து, நன்றாக விற்கும் புத்தகப் பட்டியலில் இடமும் பிடித்த நேரத்தில், இன்று மெகன் மெக்காஃபெர்ட்டி (Megan F McCafferty) என்ற பெண் எழுத்தாளர் காவ்யாவின் எழுத்துக்கள் தனது Sloppy Firsts என்னும் நாவலிலிருந்து சில பகுதிகள் அப்பட்டமாக காப்பி அடிக்கப் பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். ஹார்வர்டின் மாணவர் இதழான ஹார்வர்ட் கிரிம்சனில் இந்த செய்தி வந்தபோது மறுத்த காவ்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மெகனின் எழுத்துக்களை தான் சிறுவயதில் நிறைய படித்திருப்பதாலும், அவரது ஆக்கங்கள் தமக்கு மிகவும் பிடித்தவையானதாலும் அவரது வார்த்தைகளை தானறியாமலே 'உள்வாங்கியிருக்கக்' கூடும் என்று கூறியுள்ளார். பத்தி பத்தியாகவா உள்வாங்கியிருப்பார் ?
இப்போது பதிப்பகத்தாரின் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது. இதோ அடுத்த ஜே கே ரோலண்ட், விக்ரம் சேத் என்று எண்ணி பணத்தை போட்டுவிட்டு கோர்ட்டு, கச்சேரி யென்று அலைய வேண்டியுள்ளது. இந்தக் கதையை படமெடுக்க வேண்டி Dreamwork நிறுவனம் முன்வந்திருந்தது. அது என்ன ஆகும் என்பது தெரியவில்லை.
கதையின் அவுட்லைனைப் பார்த்தால் இங்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் க்கு நடக்கும் கூத்துப் போலத் தான் தெரிகிறது. தானே முழுதும் எழுதாமல் (இங்கு resumeஐ தயாரிக்கும் ஏஜென்சிகள் போல) 'கதை' தயாரிக்கும் இடைமுகங்களின் உதவியை நாடியதும் இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டிருக்கலாம்.
என்னவிருந்தாலும் காவ்யாவின் முதல் நாவல் Sloppy First ஆக முடிந்தது.