கடல்கதிர் மின்நிலையம்

அதிகமான கரியமில வாயு கழிவினால் உலகம் சூடாகி (Global Warming), கடலின் மேல்மட்ட வெப்பநிலை அதிகமாகி வருகிறது. அண்மைக் கால கத்ரினாக்களுக்கு இதுவே காரணம் என்ற கருத்தினால் துப்புரவான எரிசக்தி (Clean Fuel) தயாரிப்பிலிருக்கும் பலமுயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. நீர்மின்நிலயங்கள் அத்தகையன என்றாலும் அவை அவற்றின் நீர்பிடிபகுதியின் இயற்கை சூழலையும் குடியிருப்பையும் பாதிக்கின்றன. (-ம். சர்தார் சரோவர்,அமைதிப் பள்ளத்தாக்கு திட்டங்கள்).அனல்மின்நிலையங்களும் அணுமின்நிலையங்களும் இயற்கை மாசுபடுத்தலில் முதன்மை வகிக்கின்றன. அணுமின்நிலயங்களில் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமானதும் முக்கியமானதுமாகும்.

இந்த பின்னணியில் கடல்நீர் வெப்பமடைவதையே பயன்படுத்தி மின்சக்தி உருவாக்கலை Sea Solar Power Inc என்ற நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது. ஆழ்கடலின் அடிமட்டத்தில் காணும் குளிர்நீருக்கும் மேல்மட்டத்தில் காணும் நீருக்குமுள்ள வெப்பநிலை ஏற்றத்தாழ்வைக் கொண்டு மின்னிலை இயந்திரங்கள் (Turbines/Generators) இயக்கப்படுகின்றன. மேல்மட்டத்தில் 80ºF ஆகவும் கீழ்மட்டத்தில் (3000 அடி ஆழம்) 40°F ஆகவும் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையம் மின்னுற்பத்தியைத் தவிர தூயநீரையும் உபபொருளாக வழங்குகிறது. கடற்கரை அருகே நிறுவப்பட்டால் 10 MW வரையும் நடுக்கடலில் அமைக்கப்பட்டால் 100 MW வரையும் உற்பத்தி செய்ய முடியும் என அவர்கள் தளம் SeaSolarPower சொல்கிறது.

மேலும் உற்பத்தி செலவு அணுசக்தி, நிலக்கரி மற்றும் நிலத்தடி வாயு மூலம் தயாரிக்கும் அளவே இருக்கும் என மதிப்பிடுகிறது.முக்கியமாக நம் போன்ற நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற மின்நிலையங்களை விட தற்போதைய திறன் குறைவாகவே இருந்தாலும், கடல்நீரிலிருந்து குடிநீர் கிடைப்பதையும் கருத்தில் கொண்டு நம் நாடு இத்துறையில் ஆராய்ச்சியிலும் சோதனைநிலை தயாரிப்பிலும் ஈடுபடவேண்டும். படர்ந்த கடற்கரையை எல்லையாக கொண்ட வாய்ப்பாலும்,நேர்த்தியாக்கிய தொழில் நுட்பத்தின் வணிக சாத்தியங்களினாலும் இம்முனைப்பில் இடும் முதலீடு வருங்கால இந்தியாவிற்கு வளம் சேர்க்கும்.

நிலவுக்குப் போவதை தள்ளிப் போடலாம்.

0 மறுமொழிகள்: