போலீஸ் இல்லை,பொறுக்கி!
பொருளாதார தலைநகராம் மும்பையில் பணம் கொழிப்பதன்றி குற்றங்களும் கொழிக்குமிடமாகும். 1980 களில் மும்பையின் கீழ் உலக (underworld)தாதாக்கள் துப்பாக்கி முனையில் பணமுதலைகளிடம் தற்காப்பு பணம் பறித்துக்கொண்டனர். பணம் கொடுக்காதவரை கொல்லவும் செய்தனர்.அவர்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தவை 'என்கௌன்டர்' முறையில் தாதாக்கள் கொல்லப் பட்டது ஆகும். இவ்வகை என்கௌன்டர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் 1983ம் வருட ஐபிஎஸ் அதிகாரிகளான தயா நாயக், விஜய் சலாஸ்கர் முதலியோர்.
அப்போது எல்லா ஊடகங்களும் அவர்களது திறமையை புகழ்ந்து மகாபுருஷர்களாக்கினர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்த 'அப் தக் சப்பன்' படம் (நானாபடேகர், ரேவதி) தயா நாயக்கின் வாழ்க்கையை ஒட்டி ராம் கோபால் வர்மாவினால் எடுக்கப்பட்டது. நன்றாக ஓடி நிறைய பணமும் ஈட்டியது. இதன் முன்னால் காகர் என்று என்.சந்திரனால் இதே காவலரின் வாழ்வை மையமாக வைத்து எடுத்தப் படம் சரியாக ஓடவில்லை.
ஆனால் சென்ற வருடம் நிலமை திடீரென்று மாறியது. கதாநாயகன் வில்லனாக உருமாறினார். ஆகஸ்ட் 2005ல் ஊழல்தடுப்பு பிரிவினர்(ஊ.த.பி) தயா நாயக் மீது அபரிமிதமான சொத்து சேர்த்த வழக்கை பதிந்தனர். எவ்வாறு ரௌடிகள் பணம் பிடுங்கினரோ அதேபோல் அவர் முதலில் குற்றவாளிகளிடமும் பின் பணக்காரர்களிடமும் பணம் பறித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதைதான். ஆனால் மாநில அரசின் இடைஞ்சலால் வழக்கை மேற்கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது இது வேகம் எடுத்து கடந்த திங்களன்று பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். அவருடைய இரு உதவியாளர்கள் கைது செய்யப் படுள்ளனர். தயா நாயக் முன் ஜாமீன் கேட்டு தலைமறைவாகியுள்ளார் . நூறு கோடிக்கும் மேலாக சொத்து சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. அவருடைய மனைவி கோமலும் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கர்நாடகாவின் உடுப்பி அருகே ஹென்னஹோலே என்ற அவரின் கிராமத்தில் ஒரு கோடிரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கு பினாமியாக நன்கொடையாளர்கள் காண்பிக்கப்ப்ட்டுள்ளார்கள் என்றும் ஊ.த.பி கூறுகிறது. அப்பள்ளியின் துவக்க விழாவில் பங்கெடுத்த அமிதாப் பச்சன்,சுனில் செட்டி உட்பட அனைத்து பிரபலங்களும் விசாரிக்கப்பட உள்ளனர்.
மும்பை போலீசின் கௌரவம் 2005இல் மிகவும் கீழிறங்கி உள்ளது. வரிசையாக பாலியல் வன்முறைகள், டெல்கி பத்திரத்தாள் ஊழலில் பங்கு, இப்போது இவ்வழக்கு என தலைநிமிர முடியவில்லை. 2006 வருடமாவது அவர்களுக்கு பெருமை சேர்க்குமா எனப் பார்க்க வேண்டும்.