தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப்போட்டி !



ஓர் கட்டற்ற அனைவராலும் பங்களிக்கூடியதான கலைக்களஞ்சியத்தை உருவாக்கிட ஜிம்மி வேல்ஸ் என்ற இளைஞர் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது.உலகின் 269 மொழிகளில் இது இன்று நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டும் புதிய பக்கங்கள் சேர்க்கப்பட்டும் பரவலாகி வருகிறது. 15 மில்லியனுக்கும் மேலான தகவல் பக்கங்கள் இந்த மொழிகளில் உருவாக்கப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியா தளத்தில் காண்கிறோம். உலகின் இயல்பான பயன்பாட்டு மொழியாக விளங்கும் ஆங்கிலம் கட்டுரைகள் உள்ளடக்கத்தில் முன்நிற்கிறது. இன்று எந்த கூகிள் தேடலிலும் முதல் தேடல்முடிவுகளாக வருபவை விக்கிப்பீடியா கட்டுரைகளே.

இந்திய மொழிகளில் ஆர்வலர்களின் எண்ணிக்கைக் குறைவினால் உள்ளடக்கங்கள் எண்ணிக்கையிலும் பொருள் ஆழத்திலும் குறைவாகவே உள்ளது. முதலிரண்டு இடங்களை இந்தியும் தெலுங்கும் பெற்று தமிழ் மூன்றாமிடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவின் நிறை/குறைகளைக் குறித்து தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவுகளில் விவரமாக உரையாடப்படுகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை தரம்குறையாது கூட்டிட பல பட்டறைகளும் அறிமுக விளக்கவுரைகளும் வலைப்பதிவர்களிடையே நடத்தப்பட்டன. இந்த ஊக்க முயற்சியின் அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் நகரில் நடத்தப்படவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் ஒட்டி தமிழக அரசின் அரவணைப்பில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டியை நடத்துகிறது.இதற்கான விவரங்களை தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்தில் காணலாம். மற்றும் இதற்கென தமிழக அரசு உருவாக்கியுள்ள வலைத்தளத்தில் உங்கள் ஆக்கங்களை பதிவேற்றலாம். போட்டிக்கான கடைசி நாளாக 30 ஏப்ரல் 2010 தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை தமிழறிந்தக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்த்து மிகக்கூடுதலானவர்கள் கலந்து கொண்டு தமிழின் கட்டற்ற கலைக்கஞ்சியத்தின் வளர்ச்சிக்கு துணைபோக நல்லிதயங்களை வேண்டிக் கொள்கிறேன்.