இணையத்தில் கூட்டு படிப்பு தவறா ?
வீட்டுக் கணக்கு கொடுப்பது பெற்றோர்களுக்குத் தான் என்பது எழுதப்படாத விதி. கல்லூரிமாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிவினாக்களுக்கு கூகிளை நாடுவதும் பட்ட இறுதி அறிக்கைகளை இணையத்திலிருந்து 'எடுத்தாள்வதும்' இயல்பாக இருக்கிறது.
இந்நிலையில் வீட்டுப்பயிற்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களுக்கான தீர்வுகளை பதிவுசெய்யும் வேதியலுக்கான Facebook கூட்டுப்படிப்பு குழுமம் ஒன்றை நடத்த உதவியதற்காக கிரிஸ் அவெனிர் என்ற முதலாண்டு மாணவன் மீது கனடாவின் ரயர்சன் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.கல்லுரி ஒழுங்கீனத்திற்காக ஒரு எண்ணிக்கையும் பத்து மதிப்பெண்கள் பெறுமானமுள்ள வினாக்களுக்கு குறிப்புகள் 146 மாணவர்கள் பரிமாறிக்கொண்டதாக அவர்மீது 146 எண்ணிக்கைகளுமாக 147 குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. பொறியியல் துறையின் விசாரணையின் முடிவில் அவர் வெளியேற்றப்படவும் கூடும்.
இது மாணவர் குமுகாயத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு ஒருசில நண்பர்கள் கூட்டாக வினா தேடுவதை விட மாறானது என்று குழம்புகிறார்கள்.
இதுபற்றிய விவாதம் சிலாஷ்டாட் தளத்தில் சுவையாக நடைபெறுகிறது. உங்கள் கருத்தென்ன ?