பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !
பொங்கல் என்று நாம் கொண்டாடும் அறுவடைத்திருநாள் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களால் வழங்கப் படுகிறது. கதிரவன் தென் திசையிலிருந்து வடதிசை திரும்புகின்ற இந்நாளை சூரியனை வரவேற்பதற்கும் நன்றி தெரிவிக்கவும் நம்நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். பூமி சூரியனை வலம்வரும்பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நாளை புதிய வருடத்திற்கான துவக்கநாளாக கொள்வதும் விஞ்ஞானதிற்கு ஏற்புடையதே. சூரியனின் செங்குத்துக் கதிர்கள் மகரரேகையில் இன்று விழும். இனி அக்கதிர்கள் மெதுவாக வடதிசை நகரும். இதனையே பண்டைய காலத்தில் சூரியனின் தேர் திசை திரும்புவதாக உருவகித்தனர். (இந்நாள் திசம்பர் 23 அன்று வரும் shortest day யாகும்.பண்டைகாலத்தில் இது தை மாத முதல்நாள் இருந்திருக்கலாம் என்று விவரித்த ராம.கி யின் பதிவை தேடினேன், சுட்டி கொடுக்க; அகப்படவில்லை )
இந்தியா முழுவதும் சிறப்பான நாளாக இவ்விழா கருதப்படுகிறது. வங்காளத்தில் கங்கை கடலில் கலக்கும் கங்காசாகர் என்னுமிடத்தில் பல இலக்கம் மக்கள் இன்று தம் மூதாதையருக்கு தொழுகை நடத்தி குளிப்பார்கள்.அலகாபாத்தில் கங்கையின் பிரயாக் எனப்படும் முக்கூட்டு துறையிலும் சூரிய கடவுளை வழிபட்டு பெரும் கூட்டமான மக்கள் மூழ்கி எழுவது வழக்கமாகும்.
பஞ்சாப் மக்கள் இந்நாளை லோரி எனக் கொண்டாடுகிறார்கள். நாம் படங்களில் காணும் பாங்க்ரா வகை நடனங்கள் ஆடி நல்ல அறுவடை கொடுத்த சூரியனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.
குஜராத்தில் இது பட்டங்கள் விடும் விழாவாகும். பல வெளிநாடுகளிலிருந்தும் பட்டங்கள் விட பல குழுக்கள் பங்கு கொள்கிறார்கள். சூரியக் கடவுளையே எட்டி விடும் ஒரு குறிப்பாக இந்த பட்டம் விடுகின்ற விழா அமைந்துள்ளது. மகாராட்டிரத்தில் எள்ளினால் செய்த இலட்டுகள் தில்குல் என்று கொண்டாடப்படும் இந்தவிழாவின் குறியீடாகும். எள் சூரியனிடமிருந்து மிகுந்த எரிசக்தியை உள்வாங்குகிறது. குளிர்காலத்தில் வரும் இந்நாளில் தேவையான உடல்வெப்பத்தை ஏற்படுத்துகிறது. நமது அண்டைமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மகர சங்க்ராந்தி என்று கொண்டாடப் படுகிறது. ஆந்திராவில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு சரியான வாழ்க்கைதுணைஅமையவும் திருமணமானவர் தங்கள் கணவர்களின் நலத்திற்காகவும் கடவுளை வேண்டுகிறார்கள்.
கேரளாவில் பரவலாக கொண்டாடப்படாவிடினும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில் ஐயப்பன் மகரஜோதியாக காட்சியளிப்பது இந்த நாளிலேயாகும்.
புதுப்பானையில் புதுநெல்லின் அரிசியில் பொங்கியபொங்கலோடு கூவுவோம்,பொங்கலோ பொங்கல் !!
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!