புத்தாண்டு வாழ்த்துகள் !!
வரையற்ற காலச் சக்கரத்தில் நாமாக பிரித்துக் கொண்ட கால இடைவெளியில் ஆண்டொன்று கழிந்தது.புது வருடம் கனவுகளை நனவாக்கும், கவலைகளை கனவாக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என கடந்தகால நினைவுகளை/ நிகழ்வுகளை புறந்தள்ளி வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். நாளை உதயமாகும் ஆங்கிலப் புத்தாண்டில் வருங்காலம் வசந்தகாலமாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!
உடனேயே தமிழ் புத்தாண்டு (இம்முறை நிசமாவே புத்தாண்டுதான் !!) வருகிறது. ஆங்கில ஆண்டு 2009 உடன் திருவள்ளுவர் ஆண்டு 2040க்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகுக !
புத்துணர்ச்சியை வளர்ப்பதுடன் நடந்தவற்றை அசை போடவும் இந்நிகழ்வு இடம் கொடுக்கிறது. 2008ம் வருடம் அனைவரது வாழ்வையும் பாதித்த பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு,தீவிரவாத வன்முறைகள், வேலை இழப்புகள், ஈழத்தில் இனப்படுகொலை என மிகவும் மோசமான ஒரு ஆண்டாகவே நமது நினைவில் நிற்கும். விழுந்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு அரசுகள் எத்தனை துணைநின்றாலும் சரிகின்ற பொருளாதாரம் ஒரு புதிராகவே விளங்குகிறது. நமது விளையாட்டு வீரர்களின் (விஸ்வநாதன் ஆனந்த், பிந்த்ரா மற்றும் கிரிக்கெட்) வெற்றிகளும் நிலவுப்பயண சாதனையும் பெரிமிதமளிக்கின்றன.
கடந்த வருடம் முழுமையும் பதிவுலக பக்கமே வர இயலவில்லை. தமிழ்மணம் மிகவும் மாறி மேம்பட்டுள்ளது. நட்சத்திரங்களைத் தவிர மகுடமும் சூட்டி மகிழ்கிறார்கள். பிளாக்கரிலும் புதிதாக ‘பின்தொடர்பவர்கள்’ தோன்றியிருக்கிறார்கள் . எதுவுமே எழுதாதபோதும் சத்தியா, இளவஞ்சி என்னை பின்தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள். இடுகைகளே இடாதபோதும் இந்தாண்டின் சிறந்த இடுகைகளை எமக்கு பரிந்துரைக்கவும் என்று மடல் அனுப்பி எனது துயிலைக் கலைத்தவர்கள் தமிழ்மணத்தார் தான்.ஒன்றிலிருந்து விடுபட்டால் அந்த ஈடுபாட்டை மீட்டுக்கொள்வது புதிதாக அந்த முயற்சியில் ஈடுபடுவதை விட கடினமாக இருக்கிறது. எல்லாம் கடந்த மோனநிலையோ ?
தமிழ்மணத்தை ஒரு சுற்று வந்தால் காட்சிகளும் பதிவர்களும் மாறியிருப்பினும் கருத்துகளும் விவாதங்களும் மாறாது பேசியவையே மீண்டும் பேசப்படுவதாக தெரிகிறது. புண் இருப்பதால் அரித்துக் கொள்கிறோமா அல்லது அரித்துக் கொள்வதால் புண் ஏற்படுகிறதா எனத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு எனது சொந்த வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பணியிடம் மாறியிருக்கிறேன். முப்பதாண்டுகள் பணியாற்றிய துறையிலிருந்து விலகி முற்றிலும் புதிய துறையில் காலடி எடுத்து வைத்துள்ளேன். மாணவனின் உற்சாகத்தை மீட்டெடுத்திருக்கிறேன்.தை பிறந்தால் வழி பிறக்குமென, 2040 திருப்புமுனை ஆண்டாக விளங்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, புத்தாண்டைத் தொடங்குகிறேன்.
அனைவருக்கும் உடல்வளம்,உளவளம் அமைந்த, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த, சீரும் செல்வமும் பெருகிய 2009/2040 அமைய புத்தாண்டு வாழ்த்துகள் !! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !